கருத்துகளை திரித்து பேசுவது மோடியின் கைவந்த கலை - செல்வப்பெருந்தகை


கருத்துகளை திரித்து பேசுவது மோடியின் கைவந்த கலை - செல்வப்பெருந்தகை
x

’இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைப்பதை மோடி உள்ளிட்ட எவராலும் தடுக்க முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

"காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறாததை எல்லாம் இட்டுக்கட்டி கூறி திரிபு வாதங்களை முன்வைத்து பரப்புரை மேற்கொண்ட மோடி, தற்போது புதியதொரு நச்சு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல் இருக்கிறார்கள் என்று கூறியதாக ஒரு கருத்தை வைத்துக் கொண்டு காங்கிரஸ் கட்சியுடன் உள்ள உறவை முறிக்க திமுக தயாரா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி சவால் விடுத்திருக்கிறார்.

எதற்கு எதை முடிச்சு போடுவது என்று தெரியாமல் அரசியல் உள்நோக்கத்தோடு கருத்துகளை திரித்து பேசுவது மோடியின் கைவந்த கலையாக இருக்கிறது. அதை ஒவ்வொரு கட்டத்திலும் காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்து முறியடித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் வாழ்கிற சாம்பிட்ரோடா ஏற்கனவே தெரிவித்த ஒரு கருத்துக்கு காங்கிரஸ் கட்சி மறுப்பை வெளியிட்டது. அதேபோல, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இக்கருத்தை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை என மறுப்பு கூறியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து அகில இந்திய காங்கிரசின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவின் பொறுப்பிலிருந்து சாம்பிட்ரோடா விலகிக் கொண்டிருக்கிறார். இதன்மூலம் அவரது கருத்தை காங்கிரஸ் கட்சி முழுமையாக நிராகரித்திருக்கிறது. இதற்கு பிறகும் இக்கருத்தின் அடிப்படையில் சவால் விடுவது அரசியல் நாகரீகமற்ற செயலாகும். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

மக்களவை தேர்தலுக்கு பிறகு அனைத்து மக்களையும் உள்ளடக்கிய நல்லாட்சியை 'இந்தியா' கூட்டணி அமைப்பதை நரேந்திர மோடி உள்ளிட்ட எவராலும் தடுக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.


Next Story