பொதட்டூர்பேட்டை அருகே 2 பேரிடம் மோட்டார் சைக்கிள், செல்போன் பறிப்பு


பொதட்டூர்பேட்டை அருகே 2 பேரிடம் மோட்டார் சைக்கிள், செல்போன் பறிப்பு
x

பொதட்டூர்பேட்டை அருகே 2 பேரிடம் மோட்டார் சைக்கிள், செல்போன் பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்

பள்ளிப்பட்டு தாலுகா ஆச்சாரியார் தெரு சொரக்காய் பேட்டை கிராமத்தில் வசிப்பவர் குமரவேல் (வயது 20). இவர் சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் வேலை முடித்துக்கொண்டு இரவில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வழியில் பொதட்டூர்பேட்டை வள்ளலார் கோவில் அருகே 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் குமரவேலை வழிமறித்து அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு செல்போனையும் பிடுங்கி கொண்டு தப்பினர். அதேபோல் பள்ளிப்பட்டு தாலுகா கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தயாளன் (33) என்பவர் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும் வேலை முடிந்து நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். பொம்மராஜபேட்டை கிராமம் குளம் அருகே மோட்டார் சைக்கிளில் வரும்போது மர்ம நபர்கள் தயாளனை வழிமறித்து அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர்.

இந்த 2 சம்பவங்களும் குறுகிய இடைவெளியில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து குமரவேல் மற்றும் தயாளன் இருவரும் பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிபறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story