இலங்கை துணை தூதரகத்துக்கு நாளை முருகன் அழைத்துச் செல்லப்படுவார் - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்


இலங்கை துணை தூதரகத்துக்கு நாளை முருகன் அழைத்துச் செல்லப்படுவார் - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
x
தினத்தந்தி 12 March 2024 12:21 PM GMT (Updated: 3 April 2024 7:33 AM GMT)

முருகன், ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இலங்கை துணை தூதரகத்துக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கைதிகளாக இருந்த பேரறிவாளன், முருகன், சாந்தன், ராபர்ட்பயஸ், ஜெயக்குமார் உள்பட 7 பேரை விடுதலை செய்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இவர்களில் இலங்கையை சேர்ந்த சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.

இதில் சாந்தன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி உயிரிழந்தார். இதனிடையே முருகனின் மனைவியும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று விடுதலை ஆனவருமான நளினி, சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், லண்டனில் வசிக்கும் தனது மகளுடன் சேர்ந்து வாழ்வதற்காக தானும், தனது கணவர் முருகனும் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்துள்ளதாகவும், தனது கணவர் இலங்கை குடிமகன் என்பதால், அவரை சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்துக்குச் சென்று நேர்காணலில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில், "முருகனின் நேர்காணலுக்காக புதன்கிழமை அனுமதி பெறப்பட்டுள்ளது. முருகனை தவிர முகாமில் இருக்கும் ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரும் பாஸ்போர்ட் பெறுவதற்காக அழைத்துச் செல்ல கோரிக்கை வைத்தனர். எனவே, நாளை அவர்களும் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயாராக இருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டது.

இதன்படி மூவரும் நாளை அதிகாலை 5 மணிக்கு திருச்சி முகாமில் இருந்து புறப்பட்டு 11.30 மணியளவில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு அழைத்து வரப்பட உள்ளனர் என காவல்துறை தரப்பு தெரிவித்தது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நளினி தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.


Next Story