'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு தடை விதிக்கக்கோரி சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை விதிக்கக்கோரி சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

‘தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு தடை விதிக்கக்கோரி, சென்னையில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘யாரையும் படம் பார்க்க விடமாட்டோம்' என சீமான் ஆவேசமாக தெரிவித்தார்.

சென்னை

'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு தடை விதிக்கக்கோரி, சென்னை அமைந்தகரையில் அந்த படம் வெளியாகும் தியேட்டர் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் கதிர் ராஜேந்திரன், செய்தி தொடர்பாளர் பாக்யராஜ், தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார், மண்டல செயலாளர் ஸ்ரீதரன், மாவட்ட செயலாளர் செல்வராஜூ உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில-மாவட்ட நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது சீமான் பேசியதாவது:-

'காஷ்மீர் பைல்ஸ்', 'புர்கா', 'பர்ஹானா' படங்களை தொடர்ந்து தற்போது கர்நாடகா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' படம் வந்திருக்கிறது. இந்த படத்தை எதிர்க்கிறவர்கள், நாட்டின் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பர்கள் தான் என பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். இப்போது 'திப்பு' என்ற படம் தயாராகி கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அந்த படமும் திரைக்கு வரும்.

நாட்டின் விடுதலைக்கு போராடியவரெல்லாம் இப்போது பாகிஸ்தான், வங்காளதேசத்தில் இருக்கிறார்கள். எந்த போராட்டத்தையும் செய்யாத பா.ஜ.க. நாட்டின் 20 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறது. நாடாளுமன்றத்தையும் ஆட்சி செய்கிறது. அதி பயங்கரவாதிகளிடம் இன்று நாடு சிக்கிக்கொண்டு இருக்கிறது.

'தி கேரளா ஸ்டோரி' படத்தில், அங்குள்ள இளைஞர்களை, இளம்பெண்களை மதம்மாற்றி, வேறு நாடுகளுக்கு அழைத்துச்சென்று தீவிரவாத பயிற்சி கொடுத்து, இந்த நாட்டில் குழப்பம் ஏற்படுத்தும் முயற்சி சொல்லப்பட்டு இருக்கிறது. இது, இந்த கதையை எடுக்கும் டைரக்டருக்கு தெரியும்போது, உளவுத்துறைக்கு தெரியாதா? இதை தடுக்காமல் அவர்கள் பல்லாங்குழி, பம்பரம் ஆடிக்கொண்டு இருந்தார்களா? மதமாற்றத்தை பேச யாருக்கும் தகுதி கிடையாது.

இதுபோன்ற படங்களை பார்க்க தங்கள் பிள்ளைகளை தயவு செய்து பெற்றோர் அனுமதிக்க வேண்டாம். இந்த படம் இனி திரையிடப்பட கூடாது. அப்படி மீறி படத்தை திரையிட்டால், என் கட்சியினர் தான் தியேட்டர்களில் உட்காருவார்கள். யாருமே படம் பார்க்க முடியாத அளவு செய்வார்கள். எந்த பிரச்சினை வந்தாலும் எதிர்கொள்வோம். எனவே சட்டம்-ஒழுங்கு கெடாத வகையில் அரசு இந்த சூழலை கையாள வேண்டும். சின்னப்பையன் சீமான் தானே சொன்னான், என்று அகந்தையில் இருக்கவேண்டாம். உடனடியாக படத்தை திரையிடுவதை நிறுத்த சொல்லிவிடுங்கள். தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கவேண்டும் என்றால் உரிய நடவடிக்கையை எடுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story