பெரியகோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது


தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது.

தஞ்சாவூர்

பெரிய கோவில்

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி கலைவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி கலைவிழா நேற்று தொடங்கியது. விழாவையொட்டி பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. முதல்நாளான நேற்று பெரியநாயகி அம்மனுக்கு மனோன்மணி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

2-ம் நாளான இன்று (திங்கட்கிழமை) மீனாட்சி அலங்காரமும், நாளை (செவ்வாய்க்கிழமை) சதஸ் அலங்காரமும், 18-ந் தேதி காயத்ரி அலங்காரமும், 19-ந் தேதி அன்னபூரணி அலங்காரமும், 20-ந் தேதி கஜலட்சுமி அலங்காரமும், 21-ந் தேதி சரஸ்வதி அலங்காரமும், 22-ந் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 23-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், 24-ந் தேதி விஜயதசமி அலங்காரமும் செய்யப்படுகிறது.

நவராத்திரி விழா

நவராத்திரி விழாவின்போது தினமும் பெரியநாயகி அம்மனுக்கு காலை 7.30 மணிக்கு அபிஷேக ஆராதனையும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெறுகிறது. தினமும் மாலை 6 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

தஞ்சை மேலவீதியில் உள்ள பங்காரு காமாட்சி அம்மன்கோவிலில் நவராத்திரி விழா நேற்றுமுன்தினம் தொடங்கியது. 2-வது நாளான நேற்று மாலையில் அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் நவராத்திரி கொலு பொம்மைகளும் வைக்கப்பட்டிருந்தது.


Next Story