கும்மிடிப்பூண்டியில் பணம் கேட்டு பெட்ரோல் நிலைய ஊழியர்களை தாக்கிய 4 பேருக்கு வலைவீச்சு
கும்மிடிப்பூண்டியில் பணம் கேட்டு பெட்ரோல் நிலைய ஊழியர்களை தாக்கிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் திருஞானம் (வயது 55) என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் நிலையம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் 2 மோட்டார் சைக்கிள்களில் அங்கு அடையாளம் தெரியாத 4 வாலிபர்கள் வந்தனர். மது போதையில் இருந்த அவர்கள் பெட்ரோல் நிலைய ஊழியர்களை தகாத வார்த்தையால் பேசி பணம் கேட்டு மிரட்டினர். பணம் இல்லை என்று கூறி பெட்ரோல் நிலைய அலுவலகத்திற்கு சென்ற ஊழியர்களை அவர்கள் பின்தொடர்ந்து சென்றனர். பின்னர் அங்கு ஊழியர்களை அந்த வாலிபர்கள் இரும்பு பொருளால் ஆவேசமாக தாங்கி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
இதில் பம்பு ஆப்ரேட்டரான ஆரணியை சேர்ந்த சுரேந்தர் (26) படுகாயம் அடைந்தார். இதை தடுக்க முயன்ற கவரைப்பேட்டையை சேர்ந்த பெட்ரோல் நிலைய ஊழியர் செந்தில் (50) என்பவரும் படுகாயம் அடைந்தார். இது குறித்த புகாரின் அடிப்படையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் பெட்ரோல் நிலையத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சியின் அடிப்படையில் தனிப்படை அமைத்து 4 பேரை தேடிவருகின்றனர்.