என்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை கைவிடாவிட்டால் போராட்டம் தீவிரமாகும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ்


என்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை கைவிடாவிட்டால் போராட்டம் தீவிரமாகும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ்
x

என்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை கைவிடாவிட்டால் போராட்டம் தீவிரமாகும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.

ஆலோசனை கூட்டம்

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் நில அபகரிப்பை தடுத்தல், நிலக்கரி சுரங்க விரிவாக்கம் மற்றும் புதிய நிலக்கரி சுரங்கங்கள் இல்லாத பகுதியாக கடலூர் மாவட்டத்தை அறிவிக்க செய்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமை தாங்கினார். உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுசாமி வரவேற்றார். தேசிய தென்னிந்திய நதிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.

கூடத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, 91 ஆயிரம் ஏக்கர் நிலத்தை என்.எல்.சி. சுரங்க பகுதியில் இருந்து கொள்ளிடம் வடக்கு கரை பகுதி வரை எடுக்க உள்ளனர். இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. விவசாயத்தை அழித்து எங்களுக்கு வளர்ச்சி தேவையில்லை என்றார்.

91 ஆயிரம் ஏக்கர் நிலம்

தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த கூட்டத்தில் அனைவரும் சொல்கின்ற ஒரே கருத்து என்.எல்.சி. நிர்வாகம் கடலூர் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பது தான்.

என்.எல்.சி. நிர்வாகத்திற்காக மாவட்ட நிர்வாகமும், அமைச்சர்களும், தமிழக அரசும் நிலத்தை கையகப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு பொய்யான விளக்கத்தை கொடுத்திருக்கிறார். விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் பாதிப்பு இல்லாமல் நிலத்தை கையகப்படுத்துவோம் என்கிறார்கள். எப்படி பாதிப்பு இல்லாமல் கையகப்படுத்த முடியும்?

தமிழ்நாட்டை அழிக்க விடமாட்டோம்

66 ஆண்டு காலமாக என்.எல்.சி. இயங்கிய காரணத்தினால் நுரையீரல், புற்றுநோய், வலிப்பு உள்ளிட்ட எல்லா நோய்களும் வந்து கொண்டிருக்கிறது. ரூ.2,400 கோடி லாபமீட்டும் என்.எல்.சி.யின் முதலீடு தமிழ்நாட்டில் எதுவும் கிடையாது.

தமிழக முதல்-அமைச்சர் இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட வேண்டும். நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை கைவிடுங்கள். நாங்கள் இந்த மாவட்டத்தையும், தமிழ்நாட்டையும் அழிக்க விடமாட்டோம். நாங்கள் போராட்டத்தை விட்டு பின்வாங்க மாட்டோம். நாங்கள் அடுத்தடுத்த போராட்டங்களை அறிவிப்போம்.

போராட்டம் மிகவும் கடுமையாக...

என்.எல்.சி.யின் தரகராக மாவட்ட கலெக்டர் செயல்பட்டு வருகிறார். அவரை தான் முதலில் மாற்றி இருக்க வேண்டும்.

போராட்டக்குழு அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சட்ட ரீதியிலும், அரசியல் ரீதியிலும் போராட ஒரு கூட்டு முயற்சியை ஏற்படுத்தியுள்ளோம். இனிவரும் காலங்களில் போராட்டம் மிகவும் கடுமையாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story