எத்தனை வழக்குகள் போட்டாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் - அண்ணாமலை


எத்தனை வழக்குகள் போட்டாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் - அண்ணாமலை
x

உண்மையை பேசியதற்காக தன் மீது வழக்கு போடுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது சேலம் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்திருந்தார். அதில், அண்ணாமலை தமிழக மக்களிடையே மோதல்களை ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இரு சமூகத்திற்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான பிரிவுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அரசின் அனுமதி பெற வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.

இதையடுத்து சமூக ஆர்வலர் அளித்த புகாரின் பேரில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர அரசின் செயலாளர் நந்தகுமார் அனுமதி அளித்துள்ளார். இதன் நகல் தற்போது சேலம் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி நகல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், வழக்கு தொடர்பாக அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், எத்தனை வழக்குகள் போட்டாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அண்ணாமலை கூறியிருப்பதாவது;

"கடந்த 3 ஆண்டுகளில், தி.மு.க அரசு என் மீதும், எங்கள் பா.ஜக., நிர்வாகிகள் மீதும் உண்மையை பேசியதற்காக ஏராளமான வழக்குகளைத் தொடுத்துள்ளது. தற்போது என் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்கியது.

என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது. உண்மையை பேசியதற்காக என் மீது வழக்கு போடுகின்றனர். போதைப்பொருள் வியாபாரிக்கு கட்சியில் பொறுப்பு வழங்கிய தி.மு.க.வின் உண்மை நிலை மக்களுக்கு தெரியும். இவ்வாறு அதில் அண்ணாமலை கூறியுள்ளார்.


Next Story