என்னை போன்று வேறு யாரும் அப்படி ஆகிவிடக்கூடாது... மது போதையில் முதல்-அமைச்சரை சந்திக்க சென்ற வாலிபர்...


என்னை போன்று வேறு யாரும் அப்படி ஆகிவிடக்கூடாது... மது போதையில் முதல்-அமைச்சரை சந்திக்க சென்ற வாலிபர்...
x

மது போதையில் இருந்த வாலிபர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வீடு் சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் அமைந்துள்ளது. இந்த சாலை போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ளது. இதற்கிடையே போலீஸ் என்று 'ஸ்டிக்கர்' ஒட்டிய மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் மதியம் சித்தரஞ்சன் சாலைக்குள் பயணித்தார்.

வாகனத்தில் போலீஸ் என்று எழுதி இருந்ததால் சாலையின் நுழைவு வாயிலில் கண்காணிப்பு பணியில் இருந்த போலீசார் அவரது மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை நடத்தவில்லை. அந்த வாலிபர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விசாரித்த போது அந்த வாலிபர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபர் தேனாம்பேட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அங்கு போலீசார் நடத்திய விசாரணையில், இவர், ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (வயது 24) என்பதும், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தங்கியிருந்து தண்ணீர் கேன் போடும் தொழில் செய்து வருவதும் தெரிய வந்தது.

போலீஸ் விசாரணையில் அவர், மதுபோதைக்கு தான் அடிமையாகி விட்டதாகவும், என்னை போன்று வேறு யாரும் அடிமையாகிவிடக்கூடாது என்பதால் 'டாஸ்மாக்' மதுக்கடைகளை மூட வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் நேரில் வலியுறுத்த வந்தேன் என்றும் பரபரப்பாக கூறினார்.

சென்னை ஆயிரம் விளக்கு போலீஸ் குடியிருப்பில் தண்ணீர் கேன் போட சென்ற போது அங்கு வசிக்கும் அருண் என்ற போலீஸ்காரரிடம் ஓட்டலுக்கு சென்று சாப்பாடு வாங்கி விட்டு வருகிறேன் என்று கூறி அவரது மோட்டார் சைக்கிளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு வந்தேன் என்றும் தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story