செல்போன் திருடும்போது சிக்கிக்கொண்டதால் தற்கொலைக்கு முயன்ற வடமாநில வாலிபர் - சென்டிரல் ரெயில் நிலையத்தில் பரபரப்பு


செல்போன் திருடும்போது சிக்கிக்கொண்டதால் தற்கொலைக்கு முயன்ற வடமாநில வாலிபர் - சென்டிரல் ரெயில் நிலையத்தில் பரபரப்பு
x

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் செல்போன் திருடும்போது சிக்கிக்கொண்டதால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற வடமாநில வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை

விழுப்புரத்தைச் சேர்ந்தவர் நாசர் இப்ராகிம் (வயது 46). இவர் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தின் முதலாவது நடைமேடை அருகில் நேற்று டிக்கெட் எடுப்பதற்காக நின்றுகொண்டிருந்தார். அப்போது, அருகில் இருந்த வடமாநில வாலிபர் ஒருவர், நாசர் இப்ராகிமின் பேன்ட் பையில் இருந்த செல்போனை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த நாசர் இப்ராகிம் சத்தம்போட்டவாறு அந்த வாலிபரை பிடிக்க ஓடினார். அங்கிருந்த பயணிகள் சிலர் வாலிபரை விரட்டிப்பிடித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் ஒடிசாவை சேர்ந்த பாரத் நாயக் (24) என்பது தெரியவந்தது. திடீரென பாரத் நாயக், பேண்ட் பையில் இருந்த பிளேடால் தனது கழுத்தை கீறிக்கொண்டார். அதிர்ச்சியடைந்த போலீசார், அவரிடமிருந்த பிளேடை பறிமுதல் செய்தனர். லேசான காயம் ஏற்பட்டதால் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர், பாரத் நாயக் இயற்கை உபாதை கழித்து விட்டு வருவதாக போலீசாரிடம் கூறினார். பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவரை அனுப்பி வைத்தனர். கழிவறை உள்ளே சென்ற பாரத் நாயக், தனது பேண்டை கழற்றி, அங்கே இருந்த ஜன்னல் கம்பியில் மாட்டி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

கழிவறைக்கு பின்புறம் சிறிது தூரத்தில் மோர் வியாபாரம் செய்துகொண்டிருந்த பெண் ஒருவர் இதை பார்த்து கூச்சலிட்டார். அவர் கூச்சலிட்டதை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், கழிவறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பாரத் நாயக்கை மீட்டனர். பின்னர், அவரை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவத்தால் சென்டிரல் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story