கோவை மட்டுமின்றி பா.ஜனதா எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறும் - வானதி சீனிவாசன்


கோவை மட்டுமின்றி பா.ஜனதா எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறும் - வானதி சீனிவாசன்
x

கோவை மட்டுமின்றி பா.ஜனதா எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறும் என்று வானதி சீனிவாசன் கூறினார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகம் அருகே தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து மக்களுக்கு இளநீர் மற்றும் நீர் மோர் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வரும் என மக்கள் நீதிமய்யம் கட்சியை ஆரம்பித்த கமல்ஹாசன் அதனை விட்டு தற்போது விலகி செல்வது போல் தெரிகிறது. ஊழல் கறை படிந்த காங்கிரஸ், தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளராக கமல்ஹாசன் திகழ்ந்து வருகிறார். பாரதீய ஜனதா கட்சியை பொறுத்த வரை கோவை மட்டுமின்றி எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறும். கர்நாடகாவில் பா.ஜனதா கட்சியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பாரதீய ஜனதா கட்சியில் இருந்து எவ்வளவு பெரிய தலைவர்கள் விலகி சென்றாலும் அதனால் கட்சிக்கு எந்த பின்னடைவும் கிடையாது. ஏனென்றால் தொண்டர்கள் கட்சியோடு இருக்கிறார்கள். தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக அண்ணாமலை ஏற்கனவே விளக்கம் கொடுத்துவிட்டார். இனி அதுபற்றி கூற வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story