சொத்துவரி செலுத்தாதவர்களின் கட்டிடங்கள் முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்படும் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை


சொத்துவரி செலுத்தாதவர்களின் கட்டிடங்கள் முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்படும் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
x

சொத்துவரி செலுத்தாத உரிமையாளர்களின் கட்டிடங்களின் முன்பு 'சொத்துவரி செலுத்தவில்லை' என்ற அறிப்பு பலகைகள் வைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை

சென்னை மாநகராட்சிக்கு நிலுவையிலுள்ள சொத்துவரியை வசூலிக்க வருவாய் துறையால் தீவிர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிதியாண்டில் சொத்துவரி வசூல் இலக்காக ரூ.1,500 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 22-ந்தேதி வரை ரூ.1,408.97 கோடி வசூல் செய்யப்பட்டு உள்ளது.

சொத்துவரி நிலுவையிலுள்ள சொத்து உரிமையாளர்களுக்கு குறுந்தகவல், குரல் ஒலி அழைப்புகள், வாட்ஸ் அப், அறிவிப்பு பலகைகளில் செய்தி வெளியிடுதல், திரையரங்குகளில் விழிப்புணர்வு படம், பண்பலை அலைவரிசை ஆகியவை மூலம் சொத்துவரி செலுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ரூ.50 ஆயிரத்துக்கு குறைவான சொத்துவரி நிலுவை வைத்துள்ள உரிமையாளர்களுக்கு அஞ்சல் துறை மூலம் அறிவிப்புகள் செய்தல் மற்றும் செய்தித்தாள்களில் விளம்பரங்கள் வெளியிடுதல் ஆகியவற்றின் மூலம் சொத்துவரி செலுத்த விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக மொத்தமுள்ள 13 லட்சத்து 33 ஆயிரம் சொத்து உரிமையாளர்களில் 8 லட்சத்து 85 ஆயிரம் சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரி முழுமையாக செலுத்தியுள்ளனர். நிதியாண்டின் இறுதி நாட்களான தற்போது ஒவ்வொரு நாளும் 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியை செலுத்தி வருகிறார்கள்.

இதேபோல, வரி வசூலிப்பாளர்களின் கையடக்க கருவி மூலம், சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளம் வாயிலாக பரிமாற்ற கட்டணம் ஏதும் இல்லாமல் சொத்துவரியை எளிதாக செலுத்த வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ், சிட்டி யூனியன், கரூர் வைஸ்யா, எச்.டி.எப்.சி., ஐ.டி.பி.ஐ., கனரா, தமிழ்நாடு மெர்கன்டைல், கொடாக் மகேந்திரா, லட்சுமி விலாஸ், இன்டஸ் இந்த் ஆகிய வங்கிகள் மூலம் பணமாக செலுத்திட முடியும். அனைத்து மண்டல அலுவலகங்கள் மற்றும் வார்டு அலுவலகங்கள், ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள இ-சேவை மையங்கள், நம்ம சென்னை, பே.டி.எம். மூலமாகவும், பி.பி.பி.எஸ். மூலமாகவும் பணம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சொத்துவரி அதிக நிலுவை வைத்துள்ள சொத்துவரி உரிமையாளர் கட்டிடங்களின் முகப்புகளில் அறிவிப்பு பதாகைகள் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல, சொத்துவரியை அனைத்து உரிமையாளர்களும் கட்டாயம் நிலுவையின்றி செலுத்த வேண்டும். அதன் அடிப்படையில் சொத்துவரி நிலுவை வைத்துள்ள முதன்மையான 100 சொத்து உரிமையாளர்களின் பட்டியல் மற்றும் நீதிமன்ற வழக்கு நிலுவையின் காரணமாக சொத்துவரி செலுத்த தடைபெற்ற வசூல் செய்ய இயலாத பட்டியல் ஆகியவை இணைய தளத்திலும் மற்றும் தினசரி செய்தித்தாள்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அனைத்து சொத்து உரிமையாளர்களும் இந்த நிதியாண்டு முடிவடைய சில தினங்களே உள்ள நிலையில் சொத்துவரியை நிலுவையின்றி செலுத்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story