போலி ஆவணம் தயாரித்து நிலம் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் அண்ணன், தம்பி தற்கொலை முயற்சி


போலி ஆவணம் தயாரித்து நிலம் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் அண்ணன், தம்பி தற்கொலை முயற்சி
x

போலி ஆவணம் தயாரித்து நிலம் ஆக்கிரமித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி அண்ணன், தம்பி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூரை அடுத்த திருநின்றவூர் பாக்கம் சிவலிங்கம் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 60). இவரது சகோதரர் ராஜன் (57). இவர்களுக்கு சொந்தமான பூர்வீக நிலம் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் புதுவள்ளூர் ஊராட்சிக்குட்பட்ட நயப்பாக்கம் கிராமத்தில் 30 ஏக்கர் உள்ளது. ஆனால் அந்த நிலத்தை அந்த பகுதியை சேர்ந்த சிலர் போலி ஆவணம் தயாரித்து ஆக்கிரமித்ததாகதெரிகிறது. அந்த நிலத்தை மீட்டு தரக்கோரி அண்ணன், தம்பி இரண்டு பேரும் தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார்கள். இது தொடர்பாக அவர்கள் மண வாளநகர் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தும் இதுநாள் வரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை .

இந்த நிலையில் நேற்று தங்களது நிலம் ஆக்கிரமிப்பு செய்தது சம்பந்தமாக ராஜன், அவரது சகோதரர் கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் என 10-க்கும் மேற்பட்டோ ர் மாவட்ட கலெக்டரிடம் முறையிட வந்தனர். கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து இது தொடர்பான புகார் மனுவை அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அலுவலக அதிகாரிகள் இது சம்பந்தமாக தாசில்தாரை சந்தித்து புகார் மனு அளிக்கும்படி கூறினார்கள்.

இதனால் தங்களுக்கு 10 ஆண்டுகள் ஆகியும் தீர்வு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் ராஜன், கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் அழுது புலம்பினார்கள். அப்போது ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற கிருஷ்ணன், அவரது சகோதரர் ராஜன் ஆகியோர் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் தாங்கள் ஏற்கனவே கொண்டு வந்த மண்எண்ணெய்யை எடுத்து தங்கள் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை

பார்த்த பொதுமக்கள் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்துஅவர்கள் கையில் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பறித்து சமாதானம் செய்தனர். இதன் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து உடனடியாக திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு அங்கு இருந்த பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். சகோதரர்கள் ராஜன், கிருஷ்ணன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக சமாதானம் செய்தனர்.

பின்னர் போலீசார் மேற்கண்ட இருவர் மீதும் தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினார்கள். பூர்வீக சொத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சகோதரர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது சம்பந்தமாக திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story