கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க முடியாது - பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் பேட்டி


கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க முடியாது - பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் பேட்டி
x

கோயம்பேட்டில் இருந்துதான் ஆம்னி பஸ்களை இயக்குவோம் என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து முனையம் திறக்கப்பட்டு உள்ளது. தென்மாவட்டங்கள், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு பொங்கல் பண்டிகையின்போது அரசு விரைவு பஸ்கள் அங்கிருந்து இயக்கப்பட்டன.

பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து அனைத்து அரசு விரைவு பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. ஆம்னி பஸ்கள் மட்டும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. ஆம்னி பஸ்கள் இன்று முதல் கோயம்பேட்டில் இருந்து இயக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க வேண்டும் என்று போக்குவரத்து ஆணையரகம் அறிவித்தது.

இந்த நிலையில், கோயம்பேட்டில் இருந்துதான் ஆம்னி பஸ்களை இயக்குவோம் என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அன்பழகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

2 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க முடியாது. இன்று மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க தமிழக அரசு அவகாசம் வழங்க வேண்டும். அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் முடிவெடுத்துள்ளது.

சென்னையில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீதிமன்றம் அளித்த தீர்ப்பை போக்குவரத்துத்துறை மீறுகிறது. முடிச்சூர் பேருந்து நிலையம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. பேருந்து நிலையம் தயாராகாமல் ஆம்னி பஸ்களை இயக்கினால் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஆம்னி பஸ்கள் வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்துதான் இயக்கப்படும். மாநகரப் பகுதியில் உள்ள பயணிகள் எங்கு முன்பதிவு செய்துள்ளார்களோ அந்த பகுதிக்கு நேரில் சென்று பயணம் மேற்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story