பிற கட்சிகளை சேர்ந்த 42 பேர் காங்கிரசில் சேர விருப்பம்; டி.கே.சிவக்குமார் பரபரப்பு பேட்டி


பிற கட்சிகளை சேர்ந்த 42 பேர் காங்கிரசில் சேர விருப்பம்; டி.கே.சிவக்குமார் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 12 Oct 2023 7:15 PM GMT (Updated: 12 Oct 2023 7:15 PM GMT)

பிற கட்சிகளை சேர்ந்த 42 பேர் காங்கிரசில் சேர விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும், எங்கள் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சிப்பதாகவும் டி.கே.சிவக்குமார் பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.

பெங்களூரு:

பிற கட்சிகளை சேர்ந்த 42 பேர் காங்கிரசில் சேர விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும், எங்கள் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சிப்பதாகவும் டி.கே.சிவக்குமார் பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் சேர்ந்தனர்

கர்நாடக மாநில சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தொகுதி ஜனதாதளம் (எஸ்) கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. எச்.கே.குமாரசாமி, பெலகாவி மாவட்டம் சிரஹட்டி தொகுதி பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. ராமப்பா லமானி ஆகியோர் நேற்று பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் டி.கே.சிவக்குமார் முன்னிலையில் தங்களை காங்கிரசில் இணைத்துக்கொண்டனர். அதன்பிறகு டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்கள் கட்சிக்கு பலம்

உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களுடன் பேசி, ஒருமித்த கருத்தை உருவாக்கிய பிறகே பிற கட்சியினரை எங்கள் கட்சியில் இணைத்து வருகிறோம். பா.ஜனதா-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி மீதான அதிருப்தியால் அக்கட்சிகளை சேர்ந்தவர்கள் காங்கிரசில் சேர்ந்து வருகிறார்கள். இதன் மூலம் மாநிலம், தேசிய அளவில் எங்கள் கட்சிக்கு பலம் அதிகரித்து வருகிறது.

சிலர் வருகிற 2024-ம் ஆண்டு கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் வரும் என கூறி வருகிறார்கள். அதற்கு நான் விளக்கம் அளிக்க விரும்பவில்லை. ஆம் ஆத்மி கட்சி சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட 100 பேர் நாங்கள் இந்தியா கூட்டணியில் இருப்பதால், நாடாளுமன்ற தேர்தலில் உங்களுடன் கைகோர்த்து செயல்படுவோம் என கூறியுள்ளனர். பீதர் முதல் சாம்ராஜ்நகர் மாவட்டம் வரை பலரும் காங்கிரசில் இணைய ஆர்வமாக உள்ளனர்.

42 பேர் காங்கிரசில் சேர விருப்பம்

எங்கள் கட்சியை சேர்ந்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது. பா.ஜனதாவை சேர்ந்த குழுவினர் காங்கிரசாரை சந்தித்து பேசி வருகிறார்கள். இதுகுறித்து எங்கள் கட்சியினர் எனக்கு தகவல் கொடுத்து வருகிறார்கள். இந்த விவகாரத்தில் நீங்கள் என்ன கேட்டாலும், அதுபற்றிய ஆதாரங்களை இப்போது கூற மாட்டேன்.

முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டரும், முன்னாள் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதியும் வடக்கு மற்றும் தெற்கு கர்நாடகத்தை சேர்ந்த பா.ஜனதா உள்பட பிற கட்சிகளை சேர்ந்த 42-க்கும் மேற்பட்ட தலைவர்கள் காங்கிரசில் சேர விருப்பம் தெரிவித்து இருப்பதாக கூறி என்னிடம் அவர்களின் பெயர், விவரம் அடங்கிய பட்டியலை வழங்கியுள்ளனர். விரைவில் அவர்கள் காங்கிரசில் இணைவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story