தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டிற்கு பெரும் எடுத்துக்காட்டு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்


தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டிற்கு பெரும் எடுத்துக்காட்டு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
x
தினத்தந்தி 25 Oct 2023 7:27 PM IST (Updated: 25 Oct 2023 7:28 PM IST)
t-max-icont-min-icon

கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டுவீச்சு தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டிற்கு பெரும் எடுத்துக்காட்டு என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன் இன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தேனாம்பேட்டையை சேர்ந்த ரவுடி வினோத்தை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டுவீச்சு வீசப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

தமிழ்நாடு கவர்னர் மாளிகையான சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவன் வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கிற்கு அடையாளமாக விளங்கும் கவர்னர் மாளிகையிலேயே இத்தகைய சம்பவம் நடந்திருப்பது தமிழ்நாட்டின் பாதுகாப்பையும் , மாண்பையும் ,அமைதி பூங்கா என முன்பு தமிழ்நாட்டிற்கு இருந்த அடையாளத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது.

இந்திய ஜனாதிபதி நாளை தமிழ்நாடு கவர்னர் மாளிகைக்கு வரவுள்ள நிலையில், அடிப்படை பாதுகாப்பிற்கே குந்தகமான செயல்கள் நடந்திருப்பது, தமிழ்நாடு உளவுத்துறையும் ,காவல்துறையும் இந்த விடியா ஆட்சியில் மொத்தமாக செயல் இழந்து விட்டதையே வெளிக்காட்டுவதுடன், தமிழ்நாடு பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில் சேர்ந்துவிட்டதோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

மேலும் குண்டுவீசி பிடிபட்ட நபர் இரண்டு நாட்கள் முன்னர் தான் சிறையில் இருந்து வெளிவந்தவர் என்பது தெரியவந்துள்ளது, அப்படியானால் கவர்னர் மாளிகை குண்டுவீச்சுக்கான திட்டம் சிறையிலேயே திட்டமிடப்பட்டதா? என்ற சந்தேகமும் , இதற்கு பின் மிகப்பெரிய சதிவலை பின்னபட்டிருப்பதும் உறுதியாகிறது.

மாநிலத்தின் உட்சபட்ச பாதுகாப்புக்குறிய கவர்னர் மாளிகைக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பற்ற நிலை உள்ளதையும், இந்திய ஜனாதிபதி நாளை கவர்னர் மாளிகைக்கு வர இருக்கின்ற வேளையில், இத்தகைய குண்டு வீச்சு சம்பவம் என்பது , தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கான பெரும் எடுத்துக்காட்டாக உள்ளது.

இது தான் #விடியா_திமுகமாடல்' என பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story