குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவது குறித்து அரசு வக்கீல்களுடன் போலீஸ் கமிஷனர் ஆலோசனை


குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவது குறித்து அரசு வக்கீல்களுடன் போலீஸ் கமிஷனர் ஆலோசனை
x

குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவது குறித்து அரசு வக்கீல்களுடன் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தினார்.

சென்னை

சென்னையில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விசாரணையை விரைவாக முடிக்கவும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை உறுதியாக பெற்றுத்தருவது தொடர்பாகவும் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று சென்னையில் உள்ள அரசு வக்கீல்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் சென்னை கோர்ட்டுகளில் பணியாற்றும் அரசு ஆண், பெண் வக்கீல்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். உயர் போலீஸ் அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். சென்னை எழும்பூர், சைதாப்பேட்டை, ஜார்ஜ் டவுன், பூந்தமல்லி, திருவள்ளூர் ஆகிய இடங்களில் உள்ள குற்றவியல் நீதிமன்றங்கள், செசன்ஸ் நீதிமன்றங்கள், விரைவு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றியும், அந்த வழக்குகளில் உரிய தண்டனை பெற்றுத்தருவது குறித்தும் முக்கியமாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

நீண்ட நாட்கள் நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்தும், அதை விரைவாக முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் வக்கீல்களுடன் கமிஷனர் ஆலோசனை மேற்கொண்டார்.

சாட்சிகளிடம் விசாரணையை மேம்படுத்துவது, பிடிவாரண்டுகளை நிறைவேற்றுவது போன்றவை குறித்தும் வக்கீல்களிடம் உரிய அறிவுரைகளை போலீஸ் கமிஷனர் கேட்டறிந்தார்.

இந்த ஆலோசனை நல்ல பலன் உள்ளதாக அமைந்ததாக கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு வக்கீல்களும், உயர் போலீஸ் அதிகாரிகளும் தெரிவித்தனர்.


Next Story