பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை


பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை
x

சேலம் கோர்ட்டு அண்ணாமலையை நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி இருந்தது.

சென்னை,

பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். இதில் தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிப்பது தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். இது இரு மதத்தினர் மத்தியில் மோதலைத் தூண்டும் வகையில் உள்ளதாகக்கூறி சேலம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சேலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான பியூஸ் மானுஷ் என்பவர் தொடர்ந்தார். இதனை விசாரித்த சேலம் கோர்ட்டு, அண்ணாமலையை நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியது.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு தடைக் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் அண்ணாமலை மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு முன்பாக யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியால் பொது அமைதிக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இரு மதத்தினர் மத்தியில் மோதலைத் தூண்டும் உள்நோக்கமும் எனக்கு இல்லை. அதனால், சேலம் கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளி்க்க வேண்டும். மேலும் கோர்ட்டு அனுப்பிய சம்மனை ரத்து செய்ய வேண்டும்'' என்றும் கூறியிருந்தார்.

இந்த மனுவானது நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் அண்ணாமலைக்கு எதிராக சேலம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தார். மேலும் விசாரணைக்கு நாளை நேரில் ஆஜராவதில் இருந்தும் விலக்களித்தார். மேலும் வழக்கு விசாரணையை வருகிற ஜனவரி 4-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.


Next Story