ராயபுரத்தில் நாய்களை கட்டையால் தாக்கியவர்களை தட்டிக்கேட்ட போலீஸ் ஏட்டுக்கு அடி-உதை - 5 பேர் கைது


ராயபுரத்தில் நாய்களை கட்டையால் தாக்கியவர்களை தட்டிக்கேட்ட போலீஸ் ஏட்டுக்கு அடி-உதை - 5 பேர் கைது
x

ராயபுரத்தில் நாய்களை கட்டையால் தாக்கியவர்களை தட்டிக்கேட்ட போலீஸ் ஏட்டை அடித்து உதைத்து சட்டையை கிழித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை ராயபுரம் மாதா கோவில் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜேஷ் என்ற ஸ்டைல் ராஜேஷ்(வயது 39). இவர், ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.

போக்குவரத்து போலீசாக பணியாற்றியபோது தனக்கென தனி பாணியில் கை, கால்களை 'ஸ்டைலாக' காட்டி சிக்னல் செய்து பிரபலமானவர்.

கடந்த 10 ஆண்டுகளாக பாரிமுனை, ராயபுரம், பழைய வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் மீதமுள்ள உணவுகளை சேகரித்து, இரவு நேரங்களில் சாலையில் உள்ள தெரு நாய்களுக்கு உணவளித்து வருகிறார்.

அதேபோன்று நேற்று முன்தினம் இரவு கிழக்கு கல்மண்டபம் சாலை தீயணைப்புத்துறை அலுவலகம் அருகே நாய்களுக்கு உணவளித்து விட்டு மோட்டார் சைக்கிளில் சிறிது தூரம் சென்றார். அப்போது குடிபோதையில் இருந்த 6 பேர் கும்பல், தெரு நாய்களை கட்டையால் தாக்கினர்.

நாய்களின் அலறல் சத்தம்கேட்டு திரும்பி வந்த ஏட்டு ராஜேஷ், அந்த கும்பலிடம், "எதற்கு வாயில்லா ஜீவனை அடிக்கிறீர்கள்" என தட்டிக்கேட்டார். அப்போது குடிபோதையில் இருந்த அவர்கள், போலீஸ் ஏட்டு ராஜேசை சரமாரியாக அடித்து உதைத்து, அவரது சட்டையை கிழித்தனர். அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியையும் பறிக்க முயன்றனர்.

ஆனால் தங்க சங்கிலியை ஏட்டு ராஜேஷ் கெட்டியாக பிடித்து கொண்டார். பின்னர் 6 பேரும் தப்பி ஓடிவிட்டனர். மர்ம கும்பல் தாக்கியதில் தலை, கைகளில் காயமடைந்த போலீஸ் ஏட்டு ராஜேஷ், அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த ராயபுரம் போலீசார், தப்பி ஓடிய 6 ேபர் கும்பலை அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக அதே பகுதியை ேசர்ந்த நரேஷ், காமேஷ், திவாகர் உள்பட 5 ேபரை போலீசார் கைது செய்தனர்.


Next Story