நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் தரக்கோரி கவர்னரிடம் கோரிக்கை - சட்ட அமைச்சர் ரகுபதி விளக்கம்


நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் தரக்கோரி கவர்னரிடம் கோரிக்கை - சட்ட அமைச்சர் ரகுபதி விளக்கம்
x
தினத்தந்தி 30 Dec 2023 1:57 PM GMT (Updated: 30 Dec 2023 1:59 PM GMT)

கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

சென்னை,

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக கூறி தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர் இருவரும் அமர்ந்து பேசலாமே? என யோசனை வழங்கியது.

இதையடுத்து, கவர்னர் ஆர்.என். ரவி மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு அறிவுத்தலின்படி கவர்னர் ஆர்.என். ரவியின் அழைப்பை ஏற்று அவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார். கிண்டி கவர்னர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பின்போது, நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் தரக்கோரி கவர்னரிடம் முதல்-அமைச்சர் கோரிக்கை விடுத்ததாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

கவர்னரை சந்தித்தப்பின் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில்,

சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின்படி கவர்னர் அழைப்பை ஏற்று அவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார்.

21 மசோதாக்கள் கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதில் 10 மசோதாக்களை திருப்பி அனுப்பினார்.

10 மசோதாக்களையும் 2வது முறையாக நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியுள்ளோம். நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கவர்னருக்கு கோரிக்கை வைத்து மனு அளித்துள்ளோம். முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் தொடர்பான கோப்புக்களுக்கு அனுமதி கோரியுள்ளோம். அண்ணாவின் பிறந்தநாளன்று கைதிகள் விடுதலை தொடர்பாக 68 கோப்புக்களுக்கு மட்டுமே கவர்னர் அனுமதி அளித்துள்ளார்.

எஞ்சிய கோப்புகளுக்கு கவர்னர் அனுமதி தரவில்லை. நிலுவையில் உள்ள 49 கோப்புகளுக்கு அனுமதி தருமாறு கவர்னரிடம் கோரியுள்ளோம். கோரிக்கைகளை மனுக்களாக கவர்னரிடம் வழங்கியுள்ளோம்' என்றார்.


Next Story