பூந்தமல்லி அருகே ரூ.2 கோடி போதைப்பொருள் பறிமுதல் - 2 பேர் கைது


பூந்தமல்லி அருகே ரூ.2 கோடி போதைப்பொருள் பறிமுதல் - 2 பேர் கைது
x

பூந்தமல்லியில் ரூ.2 கோடி போதைப்பொருளை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் போதைப்பொருள் அதிக அளவில் கடத்திச் செல்லப்படுவதாக பூந்தமல்லி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அம்பத்தூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் தனம்மாள் தலைமையில் மது விலக்கு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் பூந்தமல்லியில் அரசு பஸ்சில் இருந்து சந்தேகப்படும்படியாக கீழே இறங்கி வந்த 2 பேரை மடக்கி சோதனை செய்தனர். அவர்களிடம் இருந்த பையில் தடை செய்யப்பட்ட கேட்டமின் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது.

2 பேரையும் போலீசார் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், நாகப்பட்டினத்தை சேர்ந்த பாலச்சந்திரன் (வயது 45), ராம்குமார் (25) என்பது தெரியவந்தது. இவர்கள் டெல்லியில் இருந்து கேட்டமின் போதைப்பொருளை ரெயில் மூலம் கடத்தி வந்து நாகப்பட்டினத்தில் விற்பனை செய்வது தெரிந்தது.

இதற்காக டெல்லியில் இருந்து ரெயில் மூலம் போதை பொருளை கடத்தி வந்தவர்கள். சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு சென்றால் போலீசார் சோதனையில் சிக்கி கொள்வோம் என்பதற்காக வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து அரசு பஸ் மூலம் பூந்தமல்லி கொண்டு வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

அவர்களிடமிருந்து 30 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.2 கோடி என போலீசார் தெரிவித்தனர்.


Next Story