மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
நெல்லை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக இன்று நெல்லை வந்தார். அப்போது பாளை மனக்கவலம்பிள்ளை நகருக்கு சென்ற அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டார்.
வெள்ளத்தில் சேதம் அடைந்த வீடுகளை ஆய்வு செய்த பின்னர் அங்குள்ள தேவாலயத்தில் தங்கி இருந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
முன்பு ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். அரசு மெத்தனமாக செயல்பட்டுள்ளது. ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம், மாநகர் பகுதிக்குள் புகுந்து அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும்.
வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அனைத்து பொருட்களும் மிகுந்த சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட வீடுகள் தோறும் கணக்கெடுத்து தலா ரூ.25 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை புதிதாக மீண்டும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்."
இவ்வாறு அவர் கூறினார்.