தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.4.85 கோடி ஊக்கத்தொகை - முதல்-அமைச்சர் வழங்கினார்


தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.4.85 கோடி ஊக்கத்தொகை - முதல்-அமைச்சர் வழங்கினார்
x

Image Courtesy : @CMOTamilnadu twitter

190 தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.4.85 கோடி ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்று சாதிப்பதற்கு உரிய பயிற்சி அளித்தல், ஊக்கத்தொகை வழங்குதல், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஊக்கத்தொகைகளை வழங்கினார்.

இதில், கொலம்பியாவில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக தடகளத்தில் 'டிரிபிள் ஜம்ப்'பில் வெள்ளிப்பதக்கம் வென்ற டி. செல்வபிரபு, 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற பரத் ஸ்ரீதர் ஆகியோருக்கு தலா ரூ.4 லட்சம் வீதம் மொத்தம் ரூ.8 லட்சம்,

ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் எஸ். மாரீஸ்வரன், எஸ். கார்த்தி ஆகியோருக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.20 லட்சம்,

2019-ம் ஆண்டு சார்ஜாவில் நடந்த உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 2 தங்கப்பதக்கங்கள் வென்ற ஆர். பாலசுப்பிரமணியனுக்கு ரூ.10 லட்சம், ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற ஏ. செல்வராஜிக்கு ரூ. 5 லட்சம்,

குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதலில் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்ற ஜி. விஜயசாரதிக்கு ரூ. 4 லட்சம், ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதலில் 2 வெண்கலப்பதக்கம் வென்ற கே. கணேசனுக்கு ரூ.4 லட்சம், குண்டு எறிதலில் வெண்கலப்பதக்கம் வென்ற எஸ். மனோஜ்க்கு ரூ.2 லட்சம், பேட்மிண்டன் போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றிய எஸ். சிவராஜனுக்கு ரூ.3 லட்சம்,

குஜராத்தில் கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெற்ற 36-வது தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த 68 வீரர்கள் மற்றும் 112 வீராங்கனைகள் என 180 பேருக்கு ரூ.4 கோடியே 29 லட்சம் என தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 190 வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் ரூ.4 கோடியே 85 லட்சம் உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டினார்.

அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து இதுவரை 1,433 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.40.90 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. விழாவில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, சிவ.வீ. மெய்யநாதன், தயாநிதி மாறன் எம்.பி, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவர் ஐசரி கே. கணேஷ், பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.Tamil Nadu sportsperson who won medals in national and international competitions, Rs 4.85 crore incentive given by Chief Minister


Next Story