சமத்துவ பொங்கல் விழாவில் 'ரூட்தல' பிரச்சினை பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்கள் பயங்கர மோதல்-கல்வீச்சு - 3 மாணவர்கள் கைது


சமத்துவ பொங்கல் விழாவில் ரூட்தல பிரச்சினை பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்கள் பயங்கர மோதல்-கல்வீச்சு - 3 மாணவர்கள் கைது
x

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் மாணவர்கள் இரு குழுவாக பிரிந்து பயங்கர மோதலில் ஈடுபட்டனர். ‘ரூட்தல’ பிரச்சினையில் நடந்த மோதலில் நிறைய மாணவர்கள் காயம் அடைந்தனர். 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நேற்று காலை சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் ஆரம்பம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் பஸ்சில் வரும் மாணவர்கள் தலைவரான ரூட்தலைக்கும், ரெயிலில் வரும் மாணவர்கள் தலைவரான ரூட்தலைக்கும் யார் பெரியவர்? என்பதில் முதலில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கடும் மோதலாக மாறியது.

ஒரு கட்டத்தில் மாணவர்கள் இரு குழுவாக பிரிந்து பயங்கர மோதலில் ஈடுபட்டனர். சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. இதில் அப்பாவி மாணவர்கள் சிதறி ஓடினார்கள். அங்கு ஒரே போர்க்களமாக காணப்பட்டது. கல்லூரிக்குள் நடந்த விழா என்பதால் பெரிய அளவில் போலீஸ் பாதுகாப்பு போடப்படவில்லை.

கற்கள் பறந்து வந்தன. இதில் பல மாணவர்கள் காயம் அடைந்தனர். இதில் அவர்கள் ரத்தம் சொட்ட, சொட்ட ஓடினார்கள். பின்னர் அவர்கள் அருகில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் மாணவர்களாகவே சேர்ந்து சிகிச்சை பெற்றனர்.

கலவரம் உச்ச கட்டத்தை அடைந்த பிறகு சட்டசபை பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் படையினர், துணை கமிஷனர் கோபி, உதவி கமிஷனர் ரமேஷ், இன்ஸ்பெக்டர் வனிதா ஆகியோர் தலைமையில் பச்சையப்பன் கல்லூரிக்குள் நுழைந்தனர். போலீசை பார்த்ததும் மாணவர்கள் மேலும் பதற்றமடைந்து சிதறி ஓடினார்கள். மெயின் ரோட்டுக்கு வந்த மாணவர்கள் பஸ் போன்ற வாகனங்களில் ஏறி தப்பி சென்றனர்.

போலீசார் குவிக்கப்பட்டதும், கலவரம் ஓய்ந்து அமைதியானது. கல்லூரி வளாகம் முழுவதும் கற்கள் சிதறி கிடந்தன. இந்த மோதல் சம்பவம் தொடர்பாக இருதரப்பினர் மீதும் கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இருதரப்பையும் சேர்ந்த புருசோத்தமன், ஆனந்தன், பிரசாந்த் ஆகிய 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பச்சையப்பன் கல்லூரி முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story