சேலத்தில் நடைபெறும் தி.மு.க. இளைஞரணி மாநாடு உலக சாதனை படைக்கும்: அமைச்சர் கே.என்.நேரு


சேலத்தில் நடைபெறும் தி.மு.க. இளைஞரணி மாநாடு உலக சாதனை படைக்கும்:  அமைச்சர் கே.என்.நேரு
x

மாநாட்டில் மாநில சுயாட்சியை வலியுறுத்தும் வகையிலும்,மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுக்கும் வகையிலும் மத்திய அரசை வலியுறுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.

சேலம்,

தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த மாநாட்டிற்காக பிரமாண்டமான பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மாநாட்டு பந்தல் மற்றும் மேடையை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு சேலம் விமான நிலையத்திற்கும், 6 மணிக்கு மாநாடு பந்தல் அமைந்துள்ள இடத்திற்கும் வருகிறார். பின்னர் மாநாட்டில் சுடரை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து மாநாடு வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள புத்தக கண்காட்சியை திறந்து வைக்கிறார். தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக சுற்றுப்பயணம் சென்ற மோட்டார் சைக்கிள் ஊர்வலம் மாநாட்டிற்கு வருகை தரவுள்ளது. மேலும் 1000 டிரோன் கண்காட்சி நிகழ்ச்சி ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடக்கிறது. இவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்.

21-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு மாநாட்டு திடலில் தி.மு.க. கட்சி கொடி ஏற்றப்படுகிறது. 9.15 மணிக்கு மாநாடு தொடக்க விழா நடைபெறுகிறது. பின்னர் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. அதைத்தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் பேச்சாளர்கள் பேசுகின்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு மணி நேரம் மேடையில் அமர்ந்து இருப்பார். பின்னர் தங்குமிடம் செல்கிறார். தொடர்ந்து மாலை 4 மணிக்கு மீண்டும் மாநாட்டு பந்தலுக்கு வருகிறார். அப்போது தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் நேரு மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பேசுகின்றனர். பிறகு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார்.

மாநாட்டு பந்தலில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. மாநாட்டிற்குள் 2½ லட்சம் பேர், மாநாட்டிற்கு வெளியே 2½ லட்சம் பேர் என மொத்தம் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு மிகப்பெரிய மாநாடாக அமையும். தி.மு.க தலைவர் சொல்வது போன்று பிரகடன மாநாடாகவும், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடு தொடக்கமாகவும் இந்த மாநாடு வெற்றி மாநாடாக அமையும். மகளிர் அணி துணை பொதுச் செயலாளர் கனிமொழி மாநாட்டு கொடியை ஏற்றி வைக்கிறார். எழிலரசன் எம்.எல்.ஏ. மாநாட்டு அரங்கை திறந்து வைக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சியினரிடம் பேசி, அவர்கள் கூறும் தகவல்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கூறி அவரது அனுமதி பெற்று என்ன பேச வேண்டுமோ?, அதை பேசி கூட்டணி பற்றி செயல்படுத்துவோம். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் புதிய கட்சிகளை கூட்டணியில் இணைப்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது தான் சரியாக இருக்கும்.

கடந்த காலங்களில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டிற்கும், தற்போது நடைபெறும் மாநாட்டிற்கும் வித்தியாசம் உள்ளது. அப்போது 3 நாட்கள் மாநாடு நடைபெறும். தரையில் அமர்ந்து பார்க்கும் நிலை இருந்தது. தற்போது ஒரே நாளில் மாநாடு முடிக்கும் நிலையில் அதிகமான வசதியுடன் தற்போது நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. பெரிய அளவில் மாநாடு நடத்தப்படுவதால் உலக சாதனை மாநாடாகவும் அமையலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story