வெள்ளி வியாபாரி கொலை வழக்கு... கூலிப்படை மூலம் கார் ஏற்றி கொன்ற மைத்துனர் கைது


வெள்ளி வியாபாரி கொலை வழக்கு... கூலிப்படை மூலம் கார் ஏற்றி கொன்ற மைத்துனர் கைது
x

சங்கரின் இறப்பு விபத்து என கூறப்பட்ட நிலையில் அவர் மீது கார் மோதிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.

சேலம்,

சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை பாண்டுரங்கன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 47). இவருடைய மனைவி சொர்ணலதா (வயது 40). வெள்ளி வியாபாரியான இவர், வெள்ளி கட்டிகளை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

இவர் கடந்த 2ம்தேதி காலையில் பால் வாங்குவதற்காக கடைக்கு சென்று திரும்பி வந்தபோது, அந்த வழியாக வேகமாக வந்த கார், சங்கர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அந்த வழியாக நடந்து சென்றவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சங்கரின் இறப்பு விபத்து என கூறப்பட்ட நிலையில் அவர் மீது கார் மோதிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இதைத்தொடர்ந்து வெள்ளி வியாபாரிகள், சங்கர் கொலை செய்யப்பட்டதாக செவ்வாய்பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது பதிவு எண் இல்லாத ஒரு கருப்பு நிற கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

இதைத்தொடர்ந்து சங்கருக்கு யாருடன் எல்லாம் பகை உள்ளது என்பது குறித்த தகவல்களை போலீசார் திரட்டினர். அப்போது அவர், மைத்துனருடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் சங்கரின் மைத்துனர் சுபாஷ்பாபுவை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் சங்கரை கூலிப்படை மூலம் காரை ஏற்றி கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

அவர் போலீசிடம் கூறியதாவது, 'நான், சங்கரின் தங்கை விஜயலட்சுமியை திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக நான் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறேன். என்னுடைய மனைவி, மகன்கள் சங்கரின் வீட்டில் இருக்கிறார்கள். நான் அவர்களை சந்திக்க முயற்சி செய்தேன். குறிப்பாக என்னுடைய மகன்களை பார்த்து பேச வேண்டும் என்று பலமுறை முயன்று இருக்கிறேன்.

ஆனால் சங்கர் அதனை தடுத்து விடுவார். என்னுடைய மகன்களை என்னிடம் பேச விடாமல் செய்து விடுவார். இதனால் சங்கர் மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதற்காக கூலிப்படையை ஏவி சங்கரை தீர்த்துக்கட்டினேன். அதற்காக ரூ.2 லட்சம் அவர்களுக்கு கொடுத்துள்ளேன்' என்று தெரிவித்தார்.

போலீஸ் விசாரணையில் சங்கர் கொலைக்கு காரணமான சுபாஷ்பாபு கைது செய்யப்பட்டாலும் கூலிப்படையினர் பற்றிய தகவல் இன்னும் கிடைக்கவில்லை. கூலிப்படை குறித்து சுபாஷ்பாபுவும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க மறுத்து வருகிறார்.


Next Story