பா.ஜ.க.வின் தேர்தல் ஆதாயத்திற்கு எஸ்.பி.ஐ. கால அவகாசம் கேட்கிறது: சுப்ரீம் கோர்ட்டு ஏற்கக்கூடாது - முத்தரசன்


பா.ஜ.க.வின் தேர்தல் ஆதாயத்திற்கு எஸ்.பி.ஐ. கால அவகாசம் கேட்கிறது: சுப்ரீம் கோர்ட்டு ஏற்கக்கூடாது - முத்தரசன்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 6 March 2024 12:12 PM GMT (Updated: 6 March 2024 12:16 PM GMT)

தேர்தல் பத்திரங்கள் விவரங்கள் தருவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உறுதியான நிலை எடுக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

பா.ஜ.க. மத்திய அரசு 2017-18-ம் நிதியாண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் திட்டத்தை அறிவித்தது. இந்தத் தேர்தல் பத்திரப் பரிமாற்றத்திற்கு பாரத ஸ்டேட் வங்கி முகமையாக நியமிக்கப்பட்டது.

நாடாளுமன்ற ஜனநாயக கட்டமைப்பில் தேர்தல் நடைமுறைகள் வெளிப்படையாக அமைவதும், வாக்குப்பதிவு அச்சமின்றி, நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, தேர்தல் பத்திர திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஜனநாயக கட்டமைப்பை சிதைத்து வரும் பா.ஜ.க. ஒன்றிய அரசு தேர்தல் பத்திரங்கள் மூலம் பெரும் ஆதாயம் அடைந்திருக்கிறது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கில் தலைமை நீதிபதி உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் அமர்வு நீதிமன்றம் தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்பதை உறுதி செய்து, தேர்தல் பத்திரங்கள் செல்லாது என்பதுடன், இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தங்களும் செல்லாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

2019 முதல் இதுவரை மாற்றியுள்ள தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விபரங்களை - பத்திரங்கள் வாங்கியது யார்? அந்தப் பத்திரங்களை பெற்று, பணமாக மாற்றிக் கொண்டவர்கள் யார்? எந்த நிறுவனம் மற்றும் அரசியல் கட்சிகள் - என முழு விபரங்களையும் பாரத ஸ்டேட் வங்கி மார்ச் 6-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திற்கு ஒப்படைக்க வேண்டும். அந்த விபரங்களை தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பு மார்ச் 13-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்தின் இணைய வலை தளத்தில் வெளியிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு 14.02.2024-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் எஸ்.பி.ஐ. தேர்தல் பத்திர விபரங்களை சேகரிக்க ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசம் தேவை என சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டுள்ளது. எஸ்.பி.ஐ.யின் நடவடிக்கை சுப்ரீம் கோர்ட்டை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் முற்றிலும் தவறான செயலாகும். பா.ஜ.க. மத்திய அரசு பாரத ஸ்டேட் வங்கியை பலியிட்டு அரசியல் ஆதாயம் தேடும் மிக மலிவான செயலில் ஈடுபடுவது பொதுத்துறை நிறுவனத்தை அழிக்கும் பேரபாயமானது.

ஊர் தோறும் ஊழலுக்கு எதிராக வாயில் நுரை தள்ள முழங்கி வரும் பிரதமர் மோடியின் முகத்திரை கிழிபடாமல் பாதுகாக்கும் முயற்சிக்கு பாரத ஸ்டேட் வங்கி நிர்பந்திக்கப்பட்டிருக்கிறது. முன்னர் உயர் பண நீக்க நடவடிக்கையின் போதும் மீட்கப்பட்ட கள்ளப் பணம் எவ்வளவு? கறுப்புப் பணம் எவ்வளவு? என கேள்வி எழுந்த போது, எண்ணி முடிக்க கால அவகாசம் கேட்டதையும், இறுதியில் உயர் மதிப்பு பண நீக்கம் பயனற்ற நடவடிக்கையாகவும், பொருளாதார சிக்கலுக்கு வழிவகுத்து தோல்வியில் முடிந்து விட்டதை நாடு மறக்கவில்லை. இந்த நிலையில் தேர்தல் பத்திரங்கள் விபரங்கள் தருவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உறுதியான நிலை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story