ஆந்திராவில் இருந்து பஸ்சில் 26 கிலோ கஞ்சா கடத்தல் - பெண் உள்பட 3 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து பஸ்சில் கஞ்சா கடத்த முயன்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியை கடந்து ஆந்திராவில் இருந்து தமிழகம் நோக்கி செல்லும் வாகனங்களில் தினமும் பல்வேறு வழிகளில் கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியா சக்தி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆந்திர மாநில பஸ்சை அவர்கள் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர். அந்த பஸ்சில் சென்னைக்கு கடத்த முயன்ற மொத்தம் 20 கிலோ எடை கொண்ட 8 கஞ்சா பொட்டலங்கள் சிக்கியது.
இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்சில் கஞ்சா கடத்த முயன்ற ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கீதா (வயது 55), வெங்கடேசன் (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
அதேபோல், திருத்தணி அருகே உள்ள பொன்பாடி சோதனைச்சாவடியில் பஸ்சில் நடத்திய சோதனையில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் (23) என்ற வாலிபரிடம் 6 கிலோ கஞ்சா சிக்கியது. இதனையடுத்து சதீஷ் கைது செய்த திருத்தணி போலீசார் வழக்குப்பதிந்து விசாரானை நடத்தி வருகின்றனர்.