காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு பேச்சு


காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
x

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டபணிகள் குறித்த ஆய்வு கூட்டம் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்ததாவது:-

நகராட்சி நிர்வாகத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு நிதியை நேரடியாகவும், உடனடியாகவும், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு வழங்கும், பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.1,000 கோடியும், நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.400 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

எந்தெந்த பகுதிகளில் எவ்வாறான திட்டங்கள் உடனடியாக தேவை என்பது குறித்து மாநகராட்சி மேயர்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்கள் தெரிவித்தால், அது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்து சென்று அனுமதி பெற்று விரைவாக திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதோடு, அனைத்து பகுதிகளுக்கும் மழை நீர் வடிகால்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டு, நகர்ப்புறங்களில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களை மேம்படுத்தி நிலத்தடி நீரை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்ட பணிகளை விரைவாக முடித்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் குடிசை பகுதிகளில் உள்ள இடங்களில் சாலை, தெருவிளக்கு மற்றும் கழிவறை வசதிகளை முழுமையாக எங்கெல்லாம் ஏற்படுத்த முடியுமோ அங்கெல்லாம் ஏற்படுத்துவதுதான் அரசின் நோக்கமாகும்.

அனைத்து பொதுமக்களுக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்கும் வகையில் துறை செயல்பட்டு வருகிறது அந்த வகையில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க செய்வதே நகராட்சி நிர்வாக துறை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.

பேரூராட்சி் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மையின் முக்கியத்துவத்திற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அந்த வகையில் குப்பைகள் சேரும் இடத்திலேயே அதனை மக்கும் குப்பைகள் எனில் உரத்திற்காகவும், மக்காத குப்பைகள் எனில் மின்சாரமாக்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏதுவாக நகராட்சி நிர்வாக துறையின் செயலாளர் மற்றும் இயக்குனர் ஆகியோர் இந்தியாவில் இந்த திட்டம் சிறப்பாக மேற்கொண்டுள்ள இடங்களை நேரில் பார்வையிட்டு வந்துள்ளனர். அதுபோன்று நம்முடைய பகுதிகளிலும் செயல்படுத்தப்படும்.

நம்முடைய பணி என்பது நமது நகரத்தை தூய்மையாகவும், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் மாற்றி அனைத்து தேவைகளையும் பொதுமக்களுக்கு முழுமையாக வழங்கிட வேண்டுமென காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாநகராட்சி மேயர்கள், நகராட்சி் தலைவர்கள் மற்றும் பேரூராட்சி தலைவர்களுக்கு கேட்டுகொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ்மீனா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், பேரூராட்சிகளின் ஆணையர் டாக்டர் செல்வராஜ், உத்திரமேரூர் எம்.எல்.ஏ. க.சுந்தர், காஞ்சீபுரம் எம்.பி. க.செல்வம், எம்.எல்.ஏ.க்கள் சி.வி.எம்.பி.எழிலரசன், எஸ்.ஆர்.ராஜா, கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், எஸ்.எஸ்.பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story