மாணவிக்கு பாலியல் தொல்லை - சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் கடை நடத்தி வரும் பீகாரைச் சேர்ந்த நபர் கைது


மாணவிக்கு பாலியல் தொல்லை - சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் கடை நடத்தி வரும் பீகாரைச் சேர்ந்த நபர் கைது
x

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தன் குமார் என்ற நபர், மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றது தெரிய வந்தது.

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் கடந்த ஜூலை 15 ஆம் தேதி இரவு, அங்கு பயிலும் மாணவி ஒருவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அவரை ஒரு நபர் வழிமறித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார். அந்த நபரிடம் இருந்து தப்பிச் சென்ற மாணவி, இது குறித்து தனது நண்பரிடம் தெரிவித்துள்ளார்.

சுமார் 20 வயது மதிக்கத்தக்க நபர் தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாக தெரிவித்த அந்த மாணவி, இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதன் தொடர்ச்சியாக ஐ.ஐ.டி. நிர்வாகம் விசாரணைக்குழு அமைத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியது.

ஐ.ஐ.டி. வளாகத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள், இரவு பணியில் இருந்தவர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் அடிப்படையில், ஐ.ஐ.டி. வளாகத்தில் கடை நடத்தி வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தன் குமார் என்ற நபர் தான் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த நபரை இன்று காலை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354 மற்றும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 4 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story