மாணவியிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது


மாணவியிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
x

மாணவியிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு போலீசார் கைது செய்தனர்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே ஒரு தனியார் பள்ளி உள்ளது. இங்கு உயிரியல் ஆசிரியராக ஜெயராஜ் என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி ஒருவர் ரெக்கார்டு நோட்டு எழுதி வரவில்லை. இதனால் ஜெயராஜ் அந்த மாணவியை பிரம்பால் அடித்துள்ளார். மேலும் மாணவி தனக்கு உடல்நிலை சரியில்லை. எனவே கையில் அடிக்கும்படி கூறினார். அதற்கு ஆசிரியர், இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் வந்து புகார் அளித்தனர். அதன்பேரில், பள்ளி நிர்வாகம் ஆசிரியர் ஜெயராஜை பணிநீக்கம் செய்தது. இதையடுத்து அந்த பள்ளியில் பயின்று வரும் சக மாணவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

இருந்தபோதும், அந்த மாணவர்கள் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் குரூப்பை உருவாக்கி அதில் சம்பந்தப்பட்ட மாணவி குறித்து அவதூறு பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த மாணவி, தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதுதொடர்பாக புகார் அளிப்பதற்காக பள்ளிக்கூடத்திற்கு நேற்று அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சென்றனர். அப்போது, அங்கு திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கிறிஸ்டோபர் என்ற ஆசிரியரை மாணவியின் உறவினர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்தினர் செங்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் விரைந்து வந்து அனைவரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மாணவியின் பெற்றோர் தென்காசி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தனர். அதன்பேரில், தென்காசி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் ஜெயராஜை கைது செய்தனர்.

இதற்கிடையே, ஆசிரியர் கிறிஸ்டோபர் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவி குறித்து அவதூறு பதிவிட்டதாக பள்ளி மாணவர்கள் 10 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story