தமிழக மக்களின் நலன் காக்க கவர்னர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை - கி.வீரமணி


தமிழக மக்களின் நலன் காக்க கவர்னர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை - கி.வீரமணி
x

தமிழக மக்களின் நலனை காக்க கவர்னர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என கி.வீரமணி தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டம்

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி சென்னையில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பனகல் மாளிகை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தொடரும் தற்கொலைகள்

ஆன்லைன் சூதாட்டம் நாட்டில் பெருகி அதன் மூலம் கொலைகள், தற்கொலைகள் தினமும் அரங்கேறி வருகிறது. ஆன்லைன் ரம்மிக்கு எதிராக அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டு செயல்படக்கூடிய நிலைக்கு வந்து கவர்னரின் கையெழுத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறது. கவர்னர் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் எங்கோ ஒரு இடத்தில் யாரோ ஒருவர் பாதிக்கப்பட்டு இறந்து கொண்டுதான் இருக்கிறார். இதற்கிடையே இந்த குறுகிய காலக்கட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் 32 பேர் பொருள், பணம் முதலியவற்றை இழந்து தற்கொலை செய்துள்ளனர். தற்கொலைகள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில் கவர்னர் ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்தி வருவது வேதனை அளிக்கிறது.

கிடப்பில் போடப்பட்ட மசோதா

தி.மு.க. அரசால் கொண்டுவரப்பட்ட அவசர சட்டம் நிரந்தர சட்டமாக நிறைவேற்றப்படுவதற்காக கவர்னர் மாளிகைக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில் ஆன்லைன் ரம்மி சூதாட்ட மசோதாவுக்கு கவர்னர் ஓப்புதல் அளிக்கவில்லை. மேலும் மக்கள் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட 20 சட்ட மசோதாக்கள் கவர்னர் மாளிகையில் ஒப்புதலுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அந்த மசோதாக்களில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான மசோதாவும் அடங்கும்.

எதற்காக தாமதம்?

அரசியல் சட்ட திட்டத்தின் படி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த கவர்னர் அதை சட்டமாக இயற்றுவதற்கு மட்டும் ஏன்? தயக்கம் காட்டி வருகிறார். தற்போது ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்கு என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகிறதோ, இதே பிரச்சினைகள்தான் நீட் தேர்வுக்கும் ஏற்பட்டது.

ஆகவே கவர்னரின் செயல்பாடு முழுக்க முழுக்க மத்திய அரசை திருப்திபடுத்துவதற்காகதான் செயல்பட்டு கொண்டிருக்கிறதே தவிர தமிழக மக்களின் நலனை காக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

நாட்டு மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் வாங்கும் கவர்னர் மக்களுக்கு எதிராக சதி செய்வது ஏற்புடையது அல்ல. இது தொடரும் பட்சத்தில் கவர்னருக்கு எதிரான போராட்டம் வலுவடையும் என்பதையும் அவர் மறந்துவிடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story