கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியல்


கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
x

பொதட்டூர்பேட்டை அருகே இரு பிரிவினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அத்திமாஞ்சேரி பேட்டை கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

பள்ளிப்பட்டு தாலுகா, அத்திமாஞ்சேரி பேட்டையில் கடந்த தமிழ் புத்தாண்டு தினத்தன்று முருகப்பெருமான் திருவீதி உலாவில் ஒரு பிரிவினரும், அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அம்பேத்கர் பட ஊர்வலம் மற்றொரு பிரிவினரும் நடத்தினர். இந்த 2 பிரிவினரும் அத்திமாஞ்சேரி பேட்டை பஜார் தெருவில் சந்தித்தபோது மோதல் ஏற்பட்டு கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் காயமடைந்தனர். இந்த மோதலில் 6 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. பொதட்டூர்பேட்டை போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அத்திமாஞ்சேரி பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பொன்னுரங்கம், ரமேஷ், வினோத் ஆகிய 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அத்திமாஞ்சேரி பேட்டை கிராமத்தில் பொதட்டூர்பேட்டை சாலை சந்திப்பில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் பொதட்டூர்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சாலை மறியலை கைவிடும் படி பலமுறை கூறியும் பொதுமக்கள் சாலை மறியலை கைவிடாததால் போலீசார் ஒன்றிய கவுன்சிலர் முத்துராமன், துரை வேலன், வெங்கடேசன், கேசவன், நரசிம்மன், விஜயலட்சுமி, விஜயா, சூர்யா, ராஜம்மாள், பொன்னம்மாள் உள்பட 19 பேரை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கிராமத்தைச் சேர்ந்த வியாபாரிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக கடையடைப்பு செய்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.


Next Story