தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் பாஜக உடன் கூட்டணி இல்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்


தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் பாஜக உடன் கூட்டணி இல்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
x

தமிழக மக்களை ஏமாற்றி தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜகவின் எண்ணம் பலிக்காது.

சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அதிமுக தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை மேற்கொண்டது. இதில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பதில் அளித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது,

இந்தியா கூட்டணியில் பல முரண்பாடுகள் உள்ளன. இந்தியா கூட்டணி உடைந்ததுபோல திமுக கூட்டணியும் உடையலாம். இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே ஒத்த கருத்துகள் இல்லை.

தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் பாஜக உடன் கூட்டணி இல்லை என்பதே எங்கள் நிலைப்பாடு. கழட்டி விட்டது விட்டதுதான். பாஜக உடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. தன்னை முன்னிலைப்படுத்தவே அண்ணாமலை பேசி வருகிறார். பாஜகவை முன்னிலைப்படுத்தவில்லை.

தமிழக மக்களை ஏமாற்றி தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜகவின் எண்ணம் பலிக்காது. நடக்காத விஷயத்தை கூறி திசைதிருப்ப அண்ணாமலை முயற்சிக்கிறார். விரைவில் அதிமுக உடன் கூட்டணி அமைக்கும் கட்சிகள் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story