'திருவண்ணாமலையும் தீபமும் போலத்தான் திருவண்ணாமலையும் திமுகவும்' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


திருவண்ணாமலையும் தீபமும் போலத்தான் திருவண்ணாமலையும் திமுகவும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 22 Oct 2023 7:00 PM IST (Updated: 22 Oct 2023 7:29 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையும் தீபமும் போலத்தான் திருவண்ணாமலையும் திமுகவும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் மலப்பாம்பாடி கிராமத்தில் திமுக வடக்கு மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப்பட்டறை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

இக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,

ஒளிமிகுந்த ஊரில் உங்கள் முகங்களையெல்லாம் பார்க்கும்போது உதயசூரியனை பார்ப்பது போல் தோன்றுகிறது. தினமும் காலை சூரிய ஒளியை பார்க்கும்போது ஏற்படும் உற்சாகம் உங்களை பார்க்கும்போது ஏற்படுகிறது. எனது சக்தியின் ரகசியமே நீங்கள்தான். திருவண்ணாமலையும் தீபமும் போலத்தான் திருவண்ணாமலையும் திமுகவும்... யாராலும் பிரிக்கமுடியாது.

கடந்த மார்ச் மாதம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினோம். அப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டோம். மாநிலம் முழுவதும் தேர்தல் பூத் கமிட்டிகளை அமைத்துள்ளோம். வெற்றி ஒன்றே இலக்காக இருக்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரத்தை கட்சிக்காக ஒதுக்குங்கள். அரசின் திட்டங்களை முழுமையாக தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். யாருக்கு என்ன தேவையோ அதை பெற்றுக்கொடுங்கள். முதியோர் உதவித்தொகை உள்பட எந்த உதவி தேவையோ அதை கேட்டு உதவிக்கொடுங்கள். அரசின் சாதனைகளை மக்களிடத்தில் எடுத்துக்கூறி புரியவையுங்கள்.

நமது திட்டங்களால் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களும் ஏதோ ஒரு விதத்தில் பயனடைந்துகொண்டிருக்கிறது. அப்படி மக்களுக்காக பார்த்து பார்த்து திட்டங்களை நாம் செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம். இதனால் திமுக ஆட்சி மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்து எந்த புதிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை என்று சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். இந்த இரண்டரை ஆண்டுகளில் திமுக ஆட்சியில் செய்த சாதனைகளை கூறவேண்டுமானால் எனக்கு தனியே 2 மணி நேரம் வேண்டும். அவ்வளவு சாதனைகள் படைத்துள்ளோம்.

அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை தான் நாம் ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கிறோம் என்று மிகப்பெரிய பொய்யஒ எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மகளிர் உரிமைத்தொகை திட்டம் அதிமுக கொண்டுவந்த திட்டமா? பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டம் அதிமுக கொண்டுவந்த திட்டமா? காலை சிற்றுண்டி திட்டம் யாருடையது அதிமுக திட்டமா? இது குறித்து எடப்பாடி பழனிசாமி பச்சை பொய் பேசி வருகிறார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடைபெற்றதா? எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழ்நாட்டின் நலன்களும், உரிமைகளும் பாஜகவிடம் அடகு வைத்து காவு கொடுக்கப்பட்டது.

திமுக குடும்பக்கட்சி தான். கோடிக்கணக்கான குடும்பங்களை வாழவைக்கும் கட்சி திமுக. ஒற்றை கையெழுத்தில் கோடிக்கணக்கான குடும்பங்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய திமுக குடும்ப கட்சி தான். வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி முழுமையாக தோற்கடிக்கப்பட இருக்கிறார். பாஜகவுடன் இருந்தால் டெபாசிட் கிடைக்காது என டெபாசிட்டை காப்பாற்ற தனியாக பிரிந்தது போல் உள்ளே வெளியே நாடகத்தை எடப்பாடி பழனிசாமி நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.

மக்களை பிளவுபடுத்தி, அடிமைப்படுத்தக்கூடிய பாசிச பாஜகவுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய தேர்தல் களத்திற்கு திருவண்ணாமலை பாசறை கூட்டம் நல்ல வழிகாட்டியாக அமையட்டும். தீபம் தெரிவதை போல இந்தியாவுக்கு நம்பிக்கை ஒளி தெரிகிறது. இந்தியா வாழ்க இந்தியா கூட்டணி வாழ்க' என்றார்.




Next Story