இடைத்தேர்தலில் தனித்து போட்டியா?, ஈபிஎஸ்-க்கு ஆதரவா?, ஓபிஎஸ்-க்கு ஆதரவா? - அண்ணாமலை தலைமையில் பாஜக ஆலோசனை


இடைத்தேர்தலில் தனித்து போட்டியா?, ஈபிஎஸ்-க்கு ஆதரவா?, ஓபிஎஸ்-க்கு ஆதரவா? - அண்ணாமலை தலைமையில் பாஜக ஆலோசனை
x

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ம் தேதி நடைபெற உள்ளது.

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது.

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில் பிப்ரவரி 7-ந் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதனிடையே, இடைத்தேர்தல் நெருக்கி வருவதால் அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இதேபோன்று தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. அதிமுக வேட்பாளர் யார்? என்பதை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்னும் அறிவிக்கவில்லை.

ஆனாலும், 100க்கும் மேற்பட்டோர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை அமைத்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை, தேர்தல் கள நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும், இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பாகவும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இது தொடர்பான தீர்ப்பு விரைவில் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை, இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை அறிவித்தால் நாங்கள் இடைத்தேர்தலில் போட்டியிடாமல் விட்டு தருவோம் இல்லையேல் வேட்பாளரை நிறுத்துவோம் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுமா? எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவு தருமா? ஓ.பன்னீர் செல்வம் தரப்பிற்கு ஆதரவு தருமா? என்பதில் தொடர்ந்து குழப்பாமான சூழ்நிலையே நிலவி வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக தனித்து வேட்பாளரை களமிறக்கலாமா?, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் களமிறங்க உள்ள அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவு தரலாமா?, ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளருக்கு பாஜக ஆதரவு தரலாமா?, தேர்தலில் போட்டியிடாமல் விலகலாமா? என பல்வேறு வழிமுறைகள் குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இந்த ஆலோசனைக்கு பின் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்கள் நிலைப்பாடு குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story