Year Ender 2023: தமிழகத்தில் நடந்த டாப் முக்கிய நிகழ்வுகள்... ஓர் பார்வை!


Year Ender 2023: தமிழகத்தில் நடந்த டாப் முக்கிய நிகழ்வுகள்... ஓர் பார்வை!
x
தினத்தந்தி 24 Dec 2023 2:09 PM GMT (Updated: 25 Dec 2023 11:51 AM GMT)

2023ம் ஆண்டில் தமிழகத்தில் நடந்த பல பரபரப்பான நிகழ்வுகளை இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.

சென்னை,


#ஜல்லிக்கட்டு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு...!

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதிக்கக் கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு மே 18-ல் தீர்ப்பு வழங்கியது.

5 நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு வழங்கிய ஒருமித்த தீர்ப்பில், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


# தமிழகம் vs தமிழ்நாடு - ஆளுநரின் சர்ச்சை கருத்து

தமிழ்நாடு என்னும் வார்த்தையினை விட தமிழகம் என்னும் சொல் தான் சரியானது என்று சர்ச்சை எழுப்பும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் பக்கத்தில் கடந்த ஜனவரியில் கருத்து தெரிவித்திருந்தார்.

ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் இந்த மாநிலங்கள் உருவானது என்பதால் பாரதத்தின் ஒரு பகுதி தமிழகம் என்பதுதான் சரி என்றும் அவர் கூறியிருந்தார்.

இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தநிலையில், திமுக மூத்த தலைவரும், எம்.பி.மான டி.ஆர்.பாலு, ஆளுநர் 50-ஆண்டுகால திராவிட மாடலை விமர்சித்துள்ளார் என்றும், இக்கருத்துக்கள் ஆளுநர் மாளிகையில் இருந்து சொல்ல வேண்டியதில்லை, பாஜக தலைமையகமான கமலாலயம் கூறவேண்டியது என்றும் ஆவேசமாக பேசியிருந்தார்.

இவரைத்தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தங்கள் கண்டனங்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

# 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றம்

கடந்த ஏப்ரலில் தமிழக சட்டமன்றத்தில் தனியார் நிறுவனங்களில் 8 மணிநேர வேலைநேரத்தினை 12மணிநேரமாக உயர்த்தும் மசோதா பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதாவிற்கு தொழிலாளர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் ஏப்ரல்.24ம்.,தேதி தமிழக அமைச்சர்கள் இதற்கு விளக்கமளித்தனர்.

அதன்படி, 12 மணிநேரம் வேலை என்பது கட்டாயம் கிடையாது என்றும், 8 மணிநேர வேலைநேரத்திற்கு பிறகு தொடர்ந்து 12 மணிநேரம் வேலை செய்யலாமா? என்பதை தொழிலாளர்கள் தான் முடிவு செய்யவேண்டும். அந்த பரிசீலனை முடிந்தப்பின்னரே இதற்கான அனுமதி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்று கூறினர்.

மேலும், 4 நாட்கள் வேலை பார்த்தால், 3 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என்று கூறிய அமைச்சர், இச்சட்டம் நிறுவனங்களுக்கும் பொருந்தாது, மின்னணு-மென்பொருள் நிறுவனங்கள், தோல்-காலணி தயாரிக்கும் உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறினார்.


# பேனா நினைவு சின்னம் அமைக்கும் திட்டம் குறித்த சர்ச்சை

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக.,கட்சி தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையிலிருந்து 360மீ., கடலுக்குள் கண்ணாடி பாலம் அமைத்து அதன்மீது பொதுமக்கள் நடந்துச்சென்று பேனா நினைவுச்சின்னத்தினை பார்வையிடும் வகையில் ரூ.81 கோடி மதிப்பில் அமைக்க திட்டமிடப்பட்டது.

இந்த திட்டத்திற்கான கருத்துக்கேட்பு கூட்டத்தினையும் மாநில அரசு ஏற்பாடு செய்தது. அதில் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து பேசிய நிலையில், நாம் தமிழர் கட்சி தலைவரான சீமான்,'பேனா நினைவு சின்னம் அமைத்தால், அதனை உடைப்பேன்'என்று மிரட்டல் விடுத்தார். இது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது.

இதனால் இத்திட்டத்திற்கு பலதரப்பட்ட துறைகளில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்ததால், அனைத்து துறை அனுமதி பெறப்பட்ட பின்னரே இந்த நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது. இதற்கான வழக்குகள் இன்னமும் நீதிமன்றத்தில் நடந்துக்கொண்டிருக்கிறது.

# ஆளுநர் ரவிக்கு எதிரான தமிழக சட்டசபையில் தனி தீர்மானம்

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உள்ளிட்ட 14 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்திருந்தார்.

மேலும், மாணவர்களுடனான ஓர் உரையாடலின் போது நிலுவையில் வைத்திருக்கும் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே கருதப்படும் என்றும் கூறியிருந்தார்.இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து பேசியிருந்தார்.

தொடர்ந்து சட்டசபையில், ஆளுநருக்கு எதிராக அரசு சார்பில் தனி தீர்மானம் நிறைவேற்றக்கூடாது என்னும் விதி திருத்தப்பட்டு, அவருக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்டது.இந்த தீர்மானத்தினை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு இந்த தீர்மானம் விவாதத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

# மதுரையில் துவங்கப்பட்ட அதிநவீன கலைஞர் நூற்றாண்டு நூலகம்

மதுரை மாவட்டம் புது நத்தம் பகுதியில் ரூ.215 கோடி செலவில் மிகப்பிரம்மாண்டமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. 2.61 ஏக்கரில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுரடி பரப்பளவில் இந்த நூலகம் கட்டப்பட்டுள்ளது.

மேலும் 18 கோடி ரூபாய் செலவில் புத்தகம் வைக்கும் அலமாரிகள், நாற்காலிகள், மேஜைகள் உள்ளிட்டவை வாங்கப்பட்டுள்ளது, ரூ.5 கோடி செலவில் கணினிகள் வாங்கி வைக்கப்பட்டுள்ளன.

அதனைத்தொடர்ந்து ரூ.60 கோடி செலவில் பல்வேறு துறைகளைச்சார்ந்த 2.5 லட்சப்புத்தகங்கள் இந்நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன என்பது மிகப்பெரும் சிறப்பாகும்.

இத்தகைய சிறப்புமிக்க 8 தளங்கள் கொண்ட உலகத்தரம் வாய்ந்த இந்நூலகத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 15ம் தேதி மதுரைக்கு சென்று திறந்து வைத்தார். தற்போது மக்கள் பயன்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

# நாகப்பட்டினம் டூ இலங்கை பயணிகள் கப்பல் சேவை துவக்கம்

தமிழ்நாடு நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு இயக்கப்படும் பயணிகள் கப்பல் சேவை கடந்த அக்டோபர்.14ம்.,தேதி மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கொடியசைத்து துவக்கிவைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் பங்கேற்றார். அப்போது அவர், 'இக்கப்பல் சேவை தொடங்கப்பட்டிருப்பது நமது உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்' ஆகும் என்று உரையாற்றினார்.

தினமும் நாகை துறைமுகத்திலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் இந்த கப்பல் மதியம் 12 மணிக்கு கங்கேசன்துறை துறைமுகத்தை அடையும்.

மீண்டும் அங்கு மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகை திரும்பும். ஒருவர் 50 கிலோ வரையிலான பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்லலாம். இலங்கைக்கு படகில் செல்ல விசா மற்றும் பாஸ்போர்ட் கட்டாயம்.

# திருநெல்வேலி-சென்னை வந்தே பாரத் ரெயில் சேவை துவக்கம்

திருநெல்வேலி-சென்னை வந்தே பாரத் ரெயில் சேவை துவக்கம் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையானது கடந்த 2019ம்.,ஆண்டு டெல்லி-வாரணாசி இடையே துவக்கி வைக்கப்பட்டது.

இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறப்பட்டதால், நாடு முழுவதும் இந்த ரெயில் சேவையினை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்தது.

இந்நிலையில், கடந்த செப்டம்பர்-24ம்.,தேதி பிரதமர் மோடி 9 வந்தே பாரத் ரெயில் சேவைகளை துவக்கி வைத்தார்.

அதில் ஒன்றுதான் நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில். இதற்கான துவக்கவிழா திருநெல்வேலி ஜங்க்ஷனில் நடந்தது. முதல்நாள் சேவையில் பயணிகளோடு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோர் பயணித்தனர். தினந்தோறும் இருமார்க்கமாகவும் இயக்கப்படும் இந்த ரெயில் செவ்வாய்கிழமைகளில் மட்டும் பராமரிப்பு காரணமாக இயக்கப்படுவதில்லை.

# தமிழகத்தை பரபரப்பாக்கிய என்கவுண்டர்கள்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பேணி காப்பதில் காவல்துறையின் பங்கு அதிகமானது. தமிழகத்தில் பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் ரவுடிகளை போலீசார் இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகின்றனர். போலீசாரின் எச்சரிக்கையும் மீறி அவர்கள் ஈடுபடுவதால் போலீசாரின் கோபத்திற்கு ஆளாகின்றனர். அந்தவகையில், கடந்த ஆகஸ்ட் 1 அன்று கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற என்கவுண்டரில் வினோத், ரமேஷ் ஆகிய இருவரும், செப்டம்பர் 16 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சோக்கண்டி என்ற பகுதியில் நடைபெற்ற என்கவுண்டரில் விஷ்வா என்பவரும், அக்டோபர் 11 அன்று திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பகுதியில் என்கவுண்டரில் பார்த்திபன், முத்துசரவணன் ஆகிய இருவரும் போலீஸ் துப்பாக்கிச்சூட்டிற்கு பலியாகினர்.

# தமிழகத்தின் புதிய தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா

தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி பொறுப்பேற்றது. அன்றே தமிழக அரசின் தலைமை செயலாளராக வெ.இறையன்பு ஐஏஏஸ் நியமனம் செய்யப்பட்டார். அவருக்கு 60 வயது நிறைவடைந்துவிட்டதால் ஜூன் 30 தேதியுடன் ஓய்வு பெற்றார்.

இந்தநிலையில் தமிழ்நாட்டின் 49வது தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா ஜூலை 1ம் தேதி பொறுப்பேற்றார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிவ்தாஸ் மீனா 5.10.1964 அன்று பிறந்தார். என்ஜினியரிங் பட்டம் பெற்றவரான சிவ்தாஸ் மீனாவிற்கு ராஜஸ்தானி, தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் நன்கு தெரியும். ஜப்பான் மொழியையும் அவர் கற்றுள்ளார்.

# ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை இல்லை - சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு

ஆன்-லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டன.

வழக்கில் இருதரப்பு வாதங்கள் முடிந்து தீர்ப்பளித்த நீதிபதிகள், தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என தெரிவித்தனர்.

தடைக்கான போதுமான காரணங்களை விளக்கவில்லை எனக்கூறி சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்-லைன் விளையாட்டுக்களுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டு வர அரசுக்கு எந்த தடையும் இல்லை என தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

# விடைபெற்ற சைலேந்திரபாபு...புதிய டிஜிபி ஆக பொறுப்பேற்ற சங்கர் ஜிவால்

தமிழ்நாட்டின் புதிய சட்ட-ஒழுங்கு டிஜிபி ஆக சங்கர் ஜிவால் கடந்த ஜூன் மாதம் பொறுப்பேற்றார். தமிழக சட்ட-ஒழுங்கு துறையின் 32வது டிஜிபி ஆக சங்கர் ஜிவால் பொறுப்பேற்றார். பதவியில் இருந்து ஓய்வு பெறும் சைலேந்திரபாபு, அதற்கான ஆவணங்களை சங்கர் ஜிவாலிடம் ஒப்படைத்தார்.


# பங்காரு அடிகளார் மரணம்

70 ஆண்டுகளுக்கு முன்புவரை மருவத்தூர் மிகச் சிறிய கிராமம். இன்றைக்கு முக்கியமான ஊராக மாறியிருக்கிறது. அதற்குக் காரணம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் திருக்கோயிலும் சித்தர் பீடம் நிறுவி அதன் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்திய அம்மா என்று அன்போடு பக்தர்களால் அழைக்கப்பட்ட பங்காரு அடிகளார். உலகெங்கும் இருந்து அவரை தரிசிக்கவும் அம்மனிடம் வேண்டுதல் செய்யவும் பக்தர்கள் திரண்டு வரத் தொடங்கினர்.

பங்காரு அடிகளார் பிரதிஷ்டை செய்த ஆதிபராசக்திக்குப் பெண்கள் பூஜை செய்யலாம் என்று அனுமதி வழங்கினார். கருவறைக்குள் பெண்களை அனுமதித்து ஆன்மிக உலகில் பெரும் மாற்றத்துக்கான விதையை ஊன்றியவர் அவர் ஆவார்.

தமிழக பக்தர்களால் "ஓம் சக்தி அம்மா" என்று அன்போடு அழைக்கப்பட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் (அக்.19) வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரது இழப்பு ஆன்மீக பக்தர்களுக்கு பேரிழப்பு என்றே சொல்லலாம். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுடன் நட்பு ரீதியான பாராட்டைப்பெற்றவர். அவருக்கு தமிழக அரசு சார்பில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.


# ரெயில் பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ரெயில் விபத்துகள்

சென்னை புறநகர் ரெயில் தடம் புரண்டது...!

சென்னையில் பல்வேறு புறநகர் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, கடந்த ஜுன் 11ம் தேதி காலை பேசன் பிரிட்ஜ் அருகே புறநகர் ரெயில் தடம் புரண்டது. இந்த விபத்தின்போது ரெயிலில் யாரும் பயணிக்கவில்லை. இதன் காரணமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

ஜன்சப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டது...!

விஜயவாடா - சென்னை சென்டிரல் ஜன்சப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த ஜுன் 9ம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் பேசன் பிரிட்ஜ் அருகே தடம்புரண்டது. இந்த விபத்தின்போது ரெயிலில் யாரும் பயணிக்கவில்லை. இதன் காரணமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

நீலகிரி மலைரெயில் தடம்புரண்டது...!

ஊட்டி - மேட்டுப்பாளையம் இடையேயான நீலகிரி மலைரெயில் கடந்த ஜுன் 8ம் தேதி மாலை 3 மணியளவில் தடம்புரண்டது. ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் சென்றுகொண்டிருந்த ரெயில் குன்னூர் ரெயில்நிலையம் அருகே தடம்புரண்டது. இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

லக்னோ - ராமேஸ்வரம் பாரத் கவுரவ் ரெயில் தீ விபத்து:-

உத்தரபிரதேசம் லக்னோவை சேர்ந்த 63 பேர் பாரத் கவுரவ் ரெயில் எனப்படும் ஆன்மீக சுற்றுலா ரெயில் பெட்டிகளில் முன்பதிவு செய்து கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி ராமேஸ்வரம் சென்றனர். அங்கு ராமேஸ்வரம் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.

நாகர்கோவில் இருந்து புனலூர் - மதுரை விரைவு ரெயிலில் இணைக்கப்பட்ட பாரத் கவுரவ் ரெயில் பெட்டிகள் ஆகஸ்ட் 17ம் தேதி 3 மணியளவில் மதுரை வந்தடைந்தன. இந்த ரெயில் பெட்டிகள் அனந்தபுரி விரைவு ரெயில் இணைக்கப்பட்டு ஆகஸ்ட் 18ம் தேதி சென்னை செல்லவிருந்தது.

மதுரை ரெயில்நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டிகளில் ஆகஸ்ட் 17ம் தேதி அதிகாலை 5.15 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்தனர். ரெயிலில் வைத்து சமையல் செய்ய சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட கியாஸ் சிலிண்டர் வெடித்தே இந்த விபத்து ஏற்பட்டதாக ரெயில்வே விசாரணையில் தெரியவந்துள்ளது.


# அமைச்சர் செந்தில்பாலாஜி முதல், அமைச்சர் பொன்முடி வரை

சட்டவிரோத பணபரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை கடந்த ஜூன்.14ம்.,தேதி செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணைக்காக அழைத்துசென்ற போது பாதி வழியிலேயே அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்னர் உயர்நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

பின்னர் அவர் புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வரும்நிலையில், அவரது ஜாமீன் மனுக்களும் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்படுகிறது.

திமுக அமைச்சரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜியை தொடர்ந்து, சொத்துகுவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. இதனையடுத்து அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. பதவியை அவர் இழந்தார்.

சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டதை தொடர்ந்து, பொன்முடியின் எம்.எல்.ஏ. பதவியும், உயர்கல்வித் துறை அமைச்சர் பொறுப்பும் பறிபோனது. தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் பதவியில் மட்டும் அவர் தொடர்ந்து இருந்து வருகிறார்.

மனைவி விசாலாட்சியுடன் கோர்ட்டில் சரணடைய 30 நாட்கள் பொன்முடிக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய பொன்முடி முடிவு செய்துள்ளார். இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக தி.மு.க. வக்கீல் என்.ஆர்.இளங்கோ எம்.பி. தெரிவித்தார்.

# சொத்துகுவிப்பு வழக்குகளில் தண்டிக்க பட்ட அமைச்சர்கள் பட்டியலில் இணைந்த பொன்முடி

சொத்துகுவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்தது. இதனையடுத்து அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. பதவியை அவர் இழக்க நேர்ந்தார்.

அரசு ஊழியர்கள் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்படும் வழக்குகள் எளிதாக எதிர்கொள்ளக் கூடியவை அல்ல. மற்ற வழக்குகளில் ஒருவரை குற்றவாளி என்று நிரூபிக்க வேண்டிய கடமை, அந்த வழக்கைத் தொடர்ந்து விசாரணை முகமையின் மீது விழுந்துவிடும். அதற்காக அவர்கள் சாட்சிகளை தேடி அலைய வேண்டியதிருக்கும்.

ஆனால் சொத்து குவிப்பு வழக்கில், ஒருவர் தன்னை குற்றமற்றவர் என்று தன்னை நிரூபிக்க, அவரே சாட்சியங்களையும் ஆவணங்களையும் தயார் செய்ய வேண்டியதிருக்கும். அது மட்டுமல்லாமல், அந்த குற்றத்திற்கு உடந்தை என்ற கணக்கில் அவருக்கு அடுத்தபடியாக குற்றம்சாட்டப்படுவது அவரின் மனைவி மற்றும் பிள்ளைகளே. குற்றம் நிரூபிக்கப்படும்போது இது மிகப் பெரிய சோகத்தை குடும்பத்திற்குள் உருவாக்கிவிடுகிறது.

இந்த சோகம் ஏற்கனவே பல முன்னாள் அமைச்சர்களின் குடும்பங்களை தாக்கியுள்ளது. தற்போது பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியையும் அந்த சோகத்தை சுமக்கின்றனர். ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் சத்தியமூர்த்தி - அவரது மனைவி சந்திரா; பொன்னுச்சாமி - பிரபாவதி; அ.மா.பரமசிவம் - நல்லம்மாள்; இந்திராகுமாரி - அவரது கணவர் பாபு ஆகியோர் ஜோடிகளாக சிறை தண்டனையை பெற்றுள்ளனர்.

ஊழல் வழக்குகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ஜெயலலிதா, அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, முன்னாள் எம்.பி. செல்வகணபதி போன்றவர்கள் தங்களின் பதவியை உடனே இழந்தனர். அந்த வரிசையில் பொன்முடியும் இடம் பிடித்துள்ளார். பொன்முடிக்கு எதிரான வழக்கு அதோடு முடியவில்லை. கடந்த 1996-2001-ம் ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவிற்கு சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவரை வேலூர் முதன்மை செசன்ஸ் கோர்ட்டு விடுதலை செய்தது. அந்த வழக்கை தாமாக முன்வந்து சென்னை ஐகோர்ட்டு விசாரித்து வருகிறது.

2006-2011-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் உயர்கல்வித்துறை மற்றும் கனிமவளங்கள் துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது, அவரது மகனும் தி.மு.க. எம்.பி.யுமான கவுதம சிகாமணிக்கு, விழுப்புரம் மாவட்டம் பூத்துறையில் செம்மண் எடுக்க 2007-ம் ஆண்டில் தமிழக அரசு அனுமதி அளித்தது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அது தொடர்பாக பொன்முடி, கவுதம சிகாமணி, உறவினர் சிலர் உள்பட 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு கீழ்க்கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது. அந்த வழக்கில் அமலாக்கத்துறையும் விசாரணை மேற்கொண்டு கவுதம சிகாமணி உள்ளிட்டோர் மீது சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுபோன்ற வழக்குகள் எல்லாம் உடனே பணக்காரராக விரும்பும் அரசியல்வாதிகளுக்கு பாடமாக உள்ளன.



# சென்னையும், வெள்ளமும் ...

வங்கக் கடலில் வலுப்பெற்ற மிக்ஜம் புயல் டிசம்பர் 5-ந் தேதி கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. கணித்தபடியே, டிசம்பர் 4 மற்றும் 5-ந் தேதிகளில் வரலாறு காணாத மழைப்பொழிவினால் சென்னை ஸ்தம்பித்தது.

சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளை மிரட்டிய மிக்ஜம் புயல், வரலாறு காணாத மழைப் பொழிவுடன் சென்னையை ஸ்தம்பிக்க வைத்தது. ஆந்திர கடல்பகுதிக்கு நகர்ந்து சென்றாலும், சென்னை உள்பட 4 மாவட்டங்களை மழை வெள்ளத்தால் கபளீகரம் செய்தது.

சென்னையும், வெள்ளமும் பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. 2015 வெள்ளத்தை விட இந்த முறை கடும் பாதிப்பை மக்கள் சந்தித்தனர். மாநகரில் பரவலாக பல நாட்கள் நீர் சூழந்திருந்தது. பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை. பாலுக்காக நீண்ட வரிசையில் மக்கள் இதுவரை நின்றதில்லை. நாள்தோறும் திரும்பிய பக்கமெல்லாம் போராட்டக்களமாக காட்சியளித்தது. மின்சாரமும், தொலைத் தொடர்பும் துண்டிக்கப்பட்டது பொதுமக்களை முற்றிலுமாக முடக்கியது.





# தென்தமிழகத்தை புரட்டி போட்ட வெள்ளம்...!

வங்கக்கடலில் உருவான மிக்ஜம் புயல் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதி கனமழையை கொட்டித்தீர்த்து மக்களை படாதபாடு படுத்திவிட்டு சென்றது.

இந்தநிலையில், தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் கடந்த 17, 18-ந் தேதிகளில் வரலாறு காணாத கனமழை கொட்டித்தீர்த்தது. வரலாறு காணாத மழையால் தென் மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறின. காயல்பட்டினத்தில் 95 செ.மீ. பேய் மழை கொட்டி தீர்த்தது.

இந்த மழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தூத்துக்குடி மாவட்டத்தின் தென்பகுதியில் தாமிரபரணி ஆறும், வடபகுதியில் காட்டாற்று வெள்ளமும் கரைபுரண்டு ஓடின. ஆற்றில் வினாடிக்கு சுமார் 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதே நேரத்தில் மழைநீரும் ஆற்றில் கலந்ததால் வினாடிக்கு 2.5 லட்சம் கனஅடி தண்ணீர் கட்டுக்கடங்காத பெருவெள்ளமாக கரைபுரண்டு ஓடியது.

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பெய்த அதி கனமழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்தன. வெள்ளத்தில் கிராமங்கள் உருக்குலைந்ததால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன.


Next Story