டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை, பணம் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை, பணம் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x

திருவள்ளூர் அருகே டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை, ரூ.9 லட்சம் ரொக்கபணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அவர்களை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது.

திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் எஸ்.என்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 44). டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி வாணி. இவர்களுக்கு யோகேஷ், மனோஜ் என்கிற 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் யோகேஷ் பூந்தமல்லியில் 9-ம் வகுப்புபடித்துவருகிறான். தினமும் பூந்தமல்லிக்கு சென்று வீட்டுக்கு வருவதில் சிரமம் இருப்பதால் பூந்தமல்லியில் வாடகைக்கு ஒரு வீடு ஒன்றை எடுத்து பால் காய்ச்சுவதற்காக நேற்று குடும்பத்துடன் குமார் சென்றார்.

இந்த நிலையில் நேற்று காலை குமாரின் சகோதரர் முரளி தற்செயலாக குமாரின் வீட்டு பக்கம் சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கேட் திறக்கப்பட்டு இருப்பதை கண்டு சந்தேகத்தில் உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் கதவும் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சகோதரர் குமாருக்கு இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து குமார் விரைந்து வந்து பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.9 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதனையடுத்து குமார் மணவாளநகர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னர் மோப்ப நாய், மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுப்பட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story