விழுப்புரம்: பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்- குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு
விழுப்புரம் அருகே பள்ளி மாணவனை சரமாரியாக தாக்கியதுடன், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவனும், மாணவியும் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு நேற்று மாலை சாமி கும்பிட சென்றுள்ளனர்.
பின்னர் அருகில் உள்ள வயல்வெளி பகுதியில் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். இரவு நேரம் தொடங்கும் வேளையில், அப்பகுதி வழியாக பைக்கில் சென்ற 3 பேர், தனிமையில் பேசிக்கொண்டிருந்த மாணவன் , மாணவியை கண்டனர்.
அவர்களின் அருகில் சென்ற அந்த கும்பல், மாணவரை சரமாரியாக தாக்கியதுடன், அவர்களில் ஒருவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அந்த கும்பர், மாணவி அணிந்திருந்த தங்க செயின், பணம் முதலியவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இருவரும் நிலைகுலைந்து போய் உள்ளதை கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக இருவரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர.
இதையடுத்து இருவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மாணவியிடம் இருந்து தகவல்களை பெற்றனர். மாணவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விழுப்புரம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.