நீர் நிலைப்பகுதிகளை ஆக்கிரமித்து பட்டா: ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு


நீர் நிலைப்பகுதிகளை ஆக்கிரமித்து பட்டா: ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 7 March 2024 5:06 PM GMT (Updated: 7 March 2024 5:31 PM GMT)

2000ம் ஆண்டுக்கு பிறகு நீர்நிலைப்பகுதிகளில் வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரையைச் சேர்ந்த மணிபாரதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மதுரை வண்டியூர் கண்மாய் கரையில் மேம்பாலமும், திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் கரையில் இருவழிச்சாலையும் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதனால் நீர்நிலைகள் அழிக்கப்படுவதால் பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாவார்கள். எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, மேற்கண்ட பணிகளுக்கு தடை விதித்தது. மேலும் சம்பந்தப்பட்ட இடங்களை நீதிபதிகளும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் முடிவில் நீதிபதிகள் கூறுகையில், "இந்த திட்டங்கள் குறித்து நாங்கள் நேரில் ஆய்வு செய்தோம். திட்டங்களைச் செயல்படுத்துவதனால் நீர்நிலைகளில் நீர் பரவல் பரப்பளவு குறையாது. சேமிப்புத் திறன் அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டது. எனவே மேற்கண்ட திட்டங்களை செயல்படுத்த விதித்த தடை உத்தரவு நீக்கப்படுகிறது. ஆனால் மக்கள் நலன் என்ற பெயரில் நீர்நிலைகளை அழிக்க முடியாது. மதுரை மண்டலத்தில் பல பெரிய நீர்நிலைகள் ஏற்கனவே காணாமல் போனதை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம்.

வீட்டுவசதி வாரியம், குடிசை மாற்று வாரியம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளுக்காக நீர்நிலைகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு துறையின் தேவைக்காக புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்றால், முதல் இலக்கு நீர்நிலைகள்தான். நீர்நிலைகளில்தான் பல கோர்ட்டு வளாகங்கள் அமைந்துள்ளன என்பதை வேதனையுடன் தெரிவிக்கிறோம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, நீர்நிலைகளுக்கு அருகில் அமைந்திருந்த நீதிமன்ற கட்டிடம் இயற்கை சீற்றத்தை எதிர்கொண்டது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, இங்கு நூற்றுக்கணக்கான வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன. அங்கு பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கண்மூடித்தனமாக கொட்டப்படுகிறது. வடிகால் மற்றும் கழிவுநீரை ஆறுகளில் கலக்கின்றனர். இது வருந்தத்தக்கது.

மதுரை மாநகரில் கிருதுமால் நதி என்ற பெயரில் ஆறு ஓடியது. ஒரு காலத்தில் நதியாக இருந்தது, தற்போது குறுகிய வாய்க்கால் ஆக மாறிவிட்டது. வைகையில் கூட சர்வீஸ் ரோடு அமைத்து அதன் அகலம் குறைக்கப்பட்டு உள்ளது.

எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீர்நிலைகளின் முழு விவரங்களைக்கொண்ட இணையதளத்தை 6 மாதத்தில் தமிழக அரசு தொடங்க வேண்டும். அதில் ஒவ்வொரு நீர்நிலையையும் (குளங்கள், ஏரிகள், ஆறுகள், கண்மாய்கள் போன்றவை உள்பட) தொடர்புடைய சர்வே எண், பகுதி, கிராமம், தாலுகா, மாவட்டம் என அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அந்த இணையதளத்தில் உள்ள விவரங்கள் தவறானவை என்பது தெரிந்தால், தனிநபர் யார் வேண்டுமானாலும் இந்த கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு வரலாம். அதன்பேரில் தவறான தரவுகளை பதிவேற்றம் செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து நீர்நிலைகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 1.1.2000-க்குப் பிறகு நீர்நிலைகள் தொடர்பாக வழங்கப்பட்ட பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு, நீர்நிலைகள் பழைய நிலைக்கு மீட்க வேண்டும்.

நீர்நிலைகளின் ஒருமைப்பாட்டை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் வளர்ச்சித் திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும்.

நீர்நிலைகள் சமுதாயத்திற்கு சொந்தமானவை. தொழில்நுட்ப ரீதியாக அவை அரசாங்கத்துக்கு சொந்தமானவையாக இருக்கலாம். அவை இயற்கையின் கொடை என்பதால் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் கிடைக்க வேண்டும். நீர்நிலைகள் கார்ப்பரேட் மயமாக்கப்பட்டதை நாம் பார்க்க முடிகிறது. நீர்நிலைகளின் தரம் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் பராமரிப்பது அதிகாரிகளின் கடமை" என்று தங்களது உத்தரவில் அவர்கள் தெரிவித்தனர்.


Next Story