நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற வியூகம் வகுத்து வருகிறோம் - செல்வப்பெருந்தகை


நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற வியூகம் வகுத்து வருகிறோம் - செல்வப்பெருந்தகை
x

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்தல் நேரத்தில் பொறுப்பேற்று இருந்தாலும் சவால்கள் எதுவும் இல்லை என்று செல்வப்பெருந்தகை கூறினார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நேற்று நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் சென்னை கிண்டி, காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி உருவச்சிலை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜரின் சிலை உள்ளிட்ட தலைவர்கள் சிலைகளுக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-

இன்னும் ஓரிரு நாளில் டெல்லியில் இருந்து தலைவர்கள் வந்த பிறகு பதவியேற்பு விழா நடைபெறும். எங்கள் தலைவர் ராகுல்காந்தி என் மீது நம்பிக்கை வைத்து, 2021 சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக நியமித்தார். இப்போது என்னை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமித்து இருக்கிறார்.

அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப காந்தி வழியில், காந்தி சமாதியில் இருந்து பணியை தொடங்கி இருக்கிறோம். எங்கள் கட்சியை தூக்கி நிறுத்தியவர்கள், உழைத்தவர்கள் ஆட்சியில் இல்லை என்றாலும் உயிரோட்டத்தோடும், உயிர்ப்போடும் தமிழ்நாடு காங்கிரசை வழிநடத்தும் தலைவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

அவர்களை எல்லாம் கலந்து ஆலோசித்து எல்லோரையும் அரவணைத்து, தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ அவர்களின் கனவுகளை நாங்கள் எல்லாம் சேர்ந்து நனவாக்குவோம். இந்த அனுபவம் உள்ள தலைவர்கள் மற்றும் தோழர்களை வைத்து கட்சியை வலிமையாக கட்டமைத்து, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சிகள் பெருவாரியான வெற்றிகளை பெறுவதற்கு வியூகம் வகுத்து வருகிறோம்.

கடந்த முறை தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதியில் 38 இடங்களில் வெற்றி பெற்றோம். இந்த முறை தமிழ்நாட்டில் 39 மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் சேர்த்து 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கான திட்டங்களை தீட்டிக்கொண்டு இருக்கிறோம்.

தமிழகத்தில் தி.மு.க.வின் நம்பிக்கைக்குரிய கூட்டணி கட்சியாக காங்கிரஸ் உள்ளது. தி.மு.க. கூட்டணியில் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகள் இந்த முறை குறையாமல் காங்கிரஸ் போட்டியிடுவதற்கு முயற்சிப்பேன். அகில இந்திய தலைமையுடன் பேசிவிட்டு இது குறித்து விரிவாக பேசுகிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்தல் நேரத்தில் பொறுப்பேற்று இருந்தாலும் சவால்கள் எதுவும் இல்லை. காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் இருக்காது. இனிவரும் காலங்களில் எந்த கருத்து வேறுபாடும் உருவாகாத அளவில் செயல்படுவேன்.

இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.


Next Story