குஜராத்தில் மகுடம் யாருக்கு?...


குஜராத்தில் மகுடம் யாருக்கு?...
x

குஜராத் மாநிலம்... காந்தி பிறந்த மண்; பிரதமர் மோடிக்கும் இதுதான் சொந்த மண்.

அங்கு 15-வது சட்டசபையை தேர்ந்தெடுக்க டிசம்பர் 1 மற்றும் 5-ந்தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 1-ந்தேதி 89 தொகுதிகளுக்கும், 5-ந்தேதி 93 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

குஜராத்தில் எப்போதும், காங்கிரசும் பாரதீய ஜனதாவும்தான் நேரடியாக மோதிக்கொள்ளும். இந்த முறை அந்த கட்சிகளுடன், ''என்னையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்'' என்பது போல், கெஜ்ரிவாலின் 'ஆம் ஆத்மி'யும் முழுமூச்சுடன் களத்தில் குதித்து இருக்கிறது.

மேலும் சில சிறிய கட்சிகள் போட்டியிட்டாலும், இந்த மூன்று கட்சிகளுக்கும் இடையேதான் மும்முனைப்போட்டி நிலவுகிறது.

மராட்டிய மாநிலத்தை இரண்டாக பிரித்து 1960-ம் ஆண்டில் புதிதாக உருவாக்கப்பட்டதுதான் குஜராத் மாநிலம். தொழில்துறையில் சிறந்து விளங்கும் மாநிலங்களில் ஒன்றான குஜராத்தின் மக்கள் தொகை சுமார் 6.5 கோடி. இவர்களில் இந்துக்கள் 88.57 சதவீதம் பேர். முஸ்லிம்கள் 9.67 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 0.52 சதவீதமும் மற்றும் பிற மதத்தினரும் உள்ளனர்.

காங்கிரஸ் செல்வாக்கு பெற்று விளங்கிய மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. அக்கட்சியின் செல்வாக்கு சரிய ஆரம்பித்ததை தொடர்ந்து, இங்கு 1995-ல் பாரதீய ஜனதா முதன் முதலாக ஆட்சியை கைப்பற்றியது. உட்கட்சி தகராறு காரணமாக பாதியிலேயே ஆட்சி கவிழ, ராஷ்ட்ரீய ஜனதாவும், காங்கிரசும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன.

அதன் பிறகு 1998-ல் பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சியை பிடித்தது. அப்போது முதல் தொடர்ந்து 6 சட்டசபை தேர்தல்களில் அந்த கட்சி வெற்றி பெற்று 24 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகிறது. 2001 முதல் 2014 வரை அங்கு முதல்-மந்திரியாக இருந்த மோடி, கட்சிக்கு வலுவான கட்டமைப்பை ஏற்படுத்தி விட்டு, பின்னர் தேசிய அரசியலுக்கு வந்து பிரதமர் ஆனார். இப்போதும் மோடிதான் குஜராத்தில் பாரதீய ஜனதாவின் முகமாக விளங்குகிறார். இதனால் சுமார் கால் நூற்றாண்டாக குஜராத் பாரதீய ஜனதாவின் கோட்டையாக விளங்கி வருகிறது.

கடைசியாக 2017-ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது அக்கட்சி பெரும் சவாலை சந்திக்க நேர்ந்தது. அப்போதுதான் புதிதாக ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு இருந்ததால், வியாபாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது. அத்துடன் பதிதார் சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தியதால் மாநிலம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவியது. மேலும், நர்மதா நதியின் குறுக்கே பத்புத் அணை கட்டும் திட்டத்துக்கு எதிராக கடலோர பகுதி மீனவர்கள் போராடி வந்தனர்.

இப்படி பல நெருக்கடிகள் இருந்த சூழ்நிலையில்தான், ஆளும் பாரதீய ஜனதா தேர்தலை சந்தித்தது. என்றாலும் மேற்கண்ட பிரச்சினைகள் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பிரதமர் மோடியின் மீதும், பாரதீய ஜனதா மீதும் மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்து அந்த கட்சிக்கு வாக்களித்தார்கள். இதனால் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 99 தொகுதிகளை கைப்பற்றி, பாரதீய ஜனதா ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. பதிவான மொத்த வாக்குகளில் 49 சதவீத வாக்குகளை பெற்றது.

ஜி.எஸ்.டி. எதிர்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்ததால், எப்படியும் பாரதீய ஜனதாவை வீழ்த்திவிடலாம் என்று நம்பிக்கையுடன் இருந்த எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 41.4 சதவீத வாக்குகளை பெற்ற அந்த கட்சிக்கு 77 தொகுதிகளே கிடைத்தன. என்றாலும் முந்தைய தேர்தல்களை விட இந்த தேர்தலில் காங்கிரஸ் கூடுதல் இடங்களை பெற்றது, அக்கட்சியினருக்கு சற்று தெம்பை அளித்தது. பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 6 தொகுதிகளில் (ஓட்டு சதவீதம் 9.6) வெற்றி பெற்றனர்.

அதற்கு முன் 2012-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா 115 தொகுதிகளிலும் (ஓட்டு சதவீதம் 47.9), காங்கிரஸ் 61 தொகுதிகளிலும் (ஓட்டு சதவீதம் 38.9), பிற கட்சிகள் 6 தொகுதிகளிலும் (ஓட்டு சதவீதம் 13.2) வெற்றி பெற்றன.

2017 சட்டசபை தேர்தலில் சற்று தடுமாறிய பாரதீய ஜனதா, அடுத்த 2 ஆண்டுகளில் அதாவது 2019-ல் நடைபெற்ற 17-வது நாடாளுமன்ற தேர்தலில் சுதாரித்து எழுந்துவிட்டது. அந்த தேர்தலில் குஜராத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளையும் அள்ளி வரலாற்று சாதனை படைத்தது. காங்கிரசுக்கு ஒரு தொகுதிகூட கிடைக்கவில்லை.

இந்த சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா 182 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. 2017-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு காங்கிரசில் இருந்து பாரதீய ஜனதாவுக்கு தாவிய 19 எம்.எல்.ஏ.க்களுக்கு தேர்தலில் போட்டியிட 'டிக்கெட்' வழங்கப்பட்டு உள்ளது.

கடந்த தேர்தலின் போது பதிதார் இடஒதுக்கீடு போராட்டத்தை முன்னின்று நடத்தி அரசுக்கு பெரும் நெருக்கடி கொடுத்த 29 வயது இளைஞரான ஹர்திக் பட்டேல், பின்னர் காங்கிரசில் சேர்ந்து அக்கட்சியின் மாநில செயல் தலைவர் ஆனார். காங்கிரசில் இருந்தால் அரசியலில் எதிர்காலம் இல்லை என்று கருதிய அவர், கடந்த ஜூன் மாதம் அந்த கட்சிக்கு முழுக்கு போட்டுவிட்டு பாரதீய ஜனதாவில் ஐக்கியமானார். இந்த தேர்தலில் அவர் விரம்காம் தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிடுகிறார்.

சமீபத்தில் தொங்கு பால விபத்து நடந்த மோர்பி தொகுதி எம்.எல்.ஏ. பிரிஜேஷ் மெர்ஜா மற்றும் 5 மந்திரிகள் உள்ளிட்ட பல எம்.எல்.ஏ.க்களுக்கு இந்த முறை 'சீட்' வழங்கப்படவில்லை. பாலம் அறுந்து ஆற்றுக்குள் விழுந்தவர்களை, தண்ணீரில் இறங்கி காப்பாற்றிய எம்.எல்.ஏ. காந்தி அம்ருதியாவுக்கு டிக்கெட் கிடைத்து இருக்கிறது.

கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா (ஜாம்நகர் வடக்கு) உள்பட கணிசமான பெண்களுக்கும் பாரதீய ஜனதாவில் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. ரிவபாவை எதிர்த்து ஜடேஜாவின் சகோதரியும், குஜராத் மகளிர் காங்கிரஸ் தலைவியுமான நைனாபா பிரச்சாரம் செய்கிறார்.

''வட மாநிலங்களில் இனி பாரதீய ஜனதாவுக்கு மாற்று காங்கிரஸ் அல்ல; நாங்கள்தான்'' என்று மார்தட்டியபடி தன்னை நிலைநிறுத்த முயற்சிக்கிறது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி. முதலில் தலைநகர் டெல்லியில் ஆட்சியை பிடித்து பெரிய கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்த ஆம் ஆத்மி, கடந்த மார்ச் மாதம் பஞ்சாப்பிலும் ஆட்சியை கைப்பற்றியது. இது தவிர கோவா மாநிலத்தில் அந்த கட்சிக்கு இரு எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

இந்த முறை குஜராத் மீது கண் வைத்துள்ள கெஜ்ரிவால் 181 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறார். ஒரு தொகுதியில் சுயேச்சைக்கு ஆம் ஆத்மி ஆதரவு அளிக்கிறது. பஞ்சாப் சட்டசபை தேர்தலில், கட்சியினரிடையே ஓட்டெடுப்பு நடத்தி நகைச்சுவை நடிகரான பக்வந்த் சிங் மான் எம்.பி.யை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவித்து சாதித்து காட்டியது போல், குஜராத்திலும் ஓட்டெடுப்பு நடத்தி தொலைக்காட்சி நெறியாளரும் கட்சியின் தேசிய இணைச்செயலாளருமான இசுதான் கத்வியை முதல்-மந்திரி வேட்பாளராக கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார்.

2017 சட்டசபை தேர்தலில் 0.1 சதவீத வாக்குகளை பெற்ற ஆம் ஆத்மி, இந்த முறை எப்படியாவது குஜராத்தில் வலுவாக காலூன்றி விடவேண்டும் என்ற ஆசையில், 300 யூனிட் இலவச மின்சாரம்; பெண்களுக்கு மாதம் ரூ.1,000; வேலையில்லாத இளைஞர்களுக்கு ரூ.3,000 வழங்குவோம் என்பன போன்ற பல இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசி இருக்கிறது. இந்த தேர்தலில் 6 சதவீத வாக்குகளை பெற்றுவிட்டால் தேசிய கட்சி என்ற அந்தஸ்தை பெற்று விடலாம் என்று அக்கட்சியினர் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.




கடந்த ஆண்டு நடந்த சூரத் மாநகராட்சி தேர்தலில் 28.5 சதவீத வாக்குகளுடன் மொத்தம் உள்ள 120 வார்டுகளில் 27 வார்டுகளை ஆம் ஆத்மி கைப்பற்றியது காங்கிரசுக்கு மட்டுமின்றி பாரதீய ஜனதாவுக்கும் அதிர்ச்சிதான். வழக்கமாக காங்கிரசுக்கு கிடைக்கும் வாக்குகள் இந்த முறை தங்கள் பக்கம் திரும்பும் என்று ஆம் ஆத்மி கணக்கு போடுகிறது. நகரங்களில் அந்த கட்சிக்கு ஓரளவு செல்வாக்கு இருந்தபோதிலும் கிராமப்புறங்களில் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் யாரும் இல்லாதது மிகப்பெரிய குறையாக உள்ளது.

இதேபோல் மல்லிகார்ஜூன கார்கே தலைமையிலான காங்கிரஸ் தனது கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரசுக்கு 3 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு 179 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரசும் வாக்காளர்களை கவரும் வாக்குறுதிகளை அளித்து உள்ளது. ஆனால் முதல்-மந்திரி வேட்பாளர் என்று யாரையும் அறிவிக்கவில்லை.

எதிர்க்கட்சிகள் அளித்துள்ள வாக்குறுதிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாரதீய ஜனதா, இலவசங்களை கூறியோ, பணத்தாசை காட்டியோ குஜராத் மக்களை ஏமாற்றிவிட முடியாது என்றும், யார் தங்களுக்கு நல்லது செய்வார்கள்? என அவர்களுக்கு நன்றாக தெரியும் என்றும் கூறி இருக்கிறது.

கடந்த 2017 சட்டசபை தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி தொழில் அதிபர்கள் அதானி, அம்பானிக்கு ஆதரவாக செயல்படுவதாக கடுமையாக குற்றம்சாட்டினார். அத்துடன் கோவில்களுக்கும் சென்று வழிபட்டார். அவரது பிரசாரம், அங்கு நடந்த இடஒதுக்கீடு போராட்டம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவை காங்கிரசுக்கு ஓரளவு சாதகமாக அமைந்ததால் அந்த கட்சியால் 77 இடங்களை கைப்பற்ற முடிந்தது.

குஜராத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான அகமது படேல் காலமாகிவிட்டதால் தற்போது அந்த கட்சிக்கு அங்கு வலுவான தலைவர்கள் யாரும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இதனால் ஆரம்பத்தில் காங்கிரசின் பிரசாரம் சற்று மந்தமாகவே இருந்தது. இதை அறிந்த ராகுல் காந்தி குஜராத்தில் சில இடங்களில் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். 'இந்திய ஒற்றுமை யாத்திரை' மேற்கொண்டுள்ள அவர் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்த இமாசலபிரதேசத்தில் பிரசாரம் செய்யாத நிலையில், குஜராத்தில் பிரசாரம் மேற்கொண்டது அங்குள்ள காங்கிரசாருக்கு உற்சாகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

1998 முதல் தொடர்ந்து 24 ஆண்டுகளாக பாரதீய ஜனதா ஆட்சியில் இருப்பதால், ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி மனநிலை மக்களிடையே இருப்பதை மறுக்க முடியாது. இதை கருத்தில் கொண்டே, பிரதமர் மோடி கடந்த ஆண்டு அங்கு விஜய் ரூபானியின் மந்திரி சபையை அதிரடியாக மாற்றி அமைத்ததோடு, முதல் முறை எம்.எல்.ஏ.வான பூபேந்திர பட்டேலை முதல்-மந்திரி ஆக்கினார்.

ஹர்திக் பட்டேல், அப்லேஷ் தாகூர் போன்ற சாதித்தலைவர்கள் பாரதீய ஜனதாவில் இணைந்த போதிலும், கிராமப்புறங்களில் சாதிப்பிரச்சினைகள் புகைந்து கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் டாக்டர்கள், ஆசிரியர்கள், சுகாதார ஊழியர்கள், கிராம அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆமதாபாத்தில் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் தேர்வில் நடந்த முறைகேடு, விஷச்சாராய சாவு, போதைப்பொருள் கடத்தல், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் பிரசாரம் பாரதீய ஜனதாவுக்கு பெரும் சவாலாக உள்ளது.

இதனால், வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு பெரும்பான்மையாக உள்ள பதிதார் சமூகத்தைச் சேர்ந்த பூபேந்திர பட்டேலையே (காட்லோடியா தொகுதி) மீண்டும் முதல்-மந்திரி பதவிக்கு பாரதீய ஜனதா முன்னிறுத்தி இருக்கிறது. இந்த தொகுதியில் இவரை எதிர்த்து பெண் எம்.பி. அமீ யாஜ்னிக்கை காங்கிரசும், விஜய் பட்டேலை ஆம் அத்மியும் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளன.

பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, அங்கு ஏராளமான நலத்திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி இருக்கிறது. இந்த தேர்தலிலும் மோடியின் சாதனைகளை மையப்படுத்தியே பாரதீய ஜனதாவின் பிரசாரம் அமைந்துள்ளது. கடந்த 4 மாதங்களில் மட்டும் அவர் பத்துக்கும் மேற்பட்ட தடவை அங்கு சென்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து இருக்கிறார். இந்த தேர்தலிலும் அவர்தான் அங்கு கதாநாயகன். தீவிர பிரசாரமும் மேற்கொண்டு உள்ளார்.

சாதி அரசியலையும், வாரிசு அரசியலையும் ஒழிக்கவேண்டும் என்று எல்லோரும் கூப்பாடு போட்டாலும், அது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது என்பது குஜராத் தேர்தலிலும் பட்டவர்த்தனமாக தெரிகிறது.

குறிப்பிட்ட தொகுதியில் இருக்கும் செல்வாக்கு; சரியான வேட்பாளர் கிடைக்காதது; தொகுதியை எப்படியாவது வென்றே தீரவேண்டும் என்ற கட்டாயம் போன்ற காரணங்களால் அரசியல் பிரமுகர்களின் வாரிசுகளுக்கு வாய்ப்பு தரவேண்டிய கட்டாய நிலை கட்சிகளுக்கு ஏற்படுகிறது. அந்த வகையில் காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய இரு கட்சிகளிலுமே தற்போதைய மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் மகன்கள், உறவினர்கள் என சுமார் 20 பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இந்த இரு கட்சிகளிலுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத பலர் மனப்புழுக்கத்தில் இருப்பதால், அவர்கள் 'உள்ளடி' வேலைகளில் ஈடுபடலாம் என கருதப்படுகிறது. அவர்களில் சிலர் கட்சி வேட்பாளருக்கு எதிராக கோதாவிலும் இறங்கி இருக்கிறார்கள். எனவே 'சீட்' கிடைக்காதவர்களாலும், போட்டி வேட்பாளர்களாலும் சில தொகுதிகளில் காங்கிரஸ், பாரதீய ஜனதா வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

இந்த முறை எழுச்சியுடன் களம் இறங்கி இருக்கும் ஆம் ஆத்மி கணிசமான வாக்குகளை பிரிக்கும் என்றும், அப்படி பிரிக்கும் ஓட்டுகள் பாரதீய ஜனதாவை விட காங்கிரசுக்குத்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். சில சமயங்களில் ஊகங்கள் தவறாக போய்விடுவதும் உண்டு.

கட்சிகளின் தலைவர்கள் முற்றுகையிட்டு இருப்பதால் உச்சகட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. தலைவர்களின் பிரசாரத்துக்கு வரும் கூட்டத்தை வைத்து வெற்றி-தோல்வியை தீர்மானிக்க முடியாது. ஏனெனில் தலைவர்களின் பேச்சை கேட்க வருபவர்கள், வேடிக்கை பார்க்க வருபவர்களெல்லாம் அவர்களுக்கு ஓட்டுப்போட்டுவிடுவார்கள் என்று சொல்ல முடியாது.

தற்போதைய நிலையில், எதிர்க்கட்சிகள் அளித்து இருக்கும் வாக்குறுதிகளும், மேற்கொண்டுள்ள பிரசாரமும் பாரதீய ஜனதாவுக்கு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சரியாக கணிப்பது சிரமம். குஜராத் தேர்தல் வெற்றி பாரதீய ஜனதாவுக்கு கவுரவ பிரச்சினையாக இருப்பதால், அது தனது கோட்டையை ஒருபோதும் 'கோட்டைவிட' விரும்பாது. குஜராத் சட்டசபை தேர்தல் முடிவு 2024-ல் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதால் அந்த கட்சி அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

முந்தைய தேர்தல்களை போல் இந்த தேர்தலிலும் பிரதமர் மோடியைத்தான் அக்கட்சி மலைபோல் நம்பி இருக்கிறது. அவருக்கு மக்களிடையே மிகுந்த செல்வாக்கு இருப்பதாலும், அவரது வலதுகரமாக இருந்து அமித்ஷா தேர்தல் உத்திகளை வகுப்பதாலும் தொடர்ந்து 7-வது தடவையாக இந்த முறையும் வெற்றி பெற்று மகுடம் சூடிவிடலாம் என்று பாரதீய ஜனதாவினர் நம்புகிறார்கள்.

அந்த நம்பிக்கை நனவாகுமா? அல்லது ஆட்சியை கைப்பற்ற துடிக்கும் காங்கிரசின் கனவு பலிக்குமா? அல்லது ஆம் ஆத்மி ஏதாவது அதிசயம் நிகழ்த்துமா? என்பது டிசம்பர் 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரிந்துவிடும்.

மாறாதய்யா மாறாது...

சில தொகுதிகள் சில கட்சிகளின் கோட்டையாக விளங்குவது உண்டு. அரசியலில் என்னதான் மாற்றங்கள் நிகழ்ந்தாலும், வேட்பாளர் யாராக இருந்தாலும் சில தொகுதிகளில் மக்கள் குறிப்பிட்ட கட்சியின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து இருப்பார்கள். அந்த கட்சிக்கே ஓட்டுப் போடுவார்கள்.

அந்த வகையில், குஜராத்தில் கடந்த 24 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் 46 தொகுதிகளில், குறிப்பிட்ட கட்சிகளையே வாக்காளர்கள் வெற்றிபெற வைத்துள்ளனர். அதாவது 31 தொகுதிகளில் பாரதீய ஜனதாவும், 15 தொகுதிகளில் காங்கிரசும் கடந்த கால் நூற்றாண்டாக தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளன. இதில் பாரதீய ஜனதா ஆமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட் போன்ற நகர்ப்புற தொகுதிகளிலும், காங்கிரஸ் கிராமப்புற மற்றும் தெற்கு, மத்திய குஜராத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

குறிப்பாக, பழங்குடியினர் அதிகம் வசிக்கும் 27 தொகுதிகளில் காங்கிரசுக்கு அதிக செல்வாக்கு உள்ளது. போர்சாத், ஜகாடியா, கர்படா உள்ளிட்ட சில தொகுதிகளில் தொடர்ந்து காங்கிரசே வெற்றி பெற்று வருகிறது.

பாரதீய பழங்குடியினர் கட்சி, 1995 முதல் ஒரு தொகுதியை தொடர்ந்து தக்கவைத்து கொண்டுள்ளது.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி



ஆமதாபாத் மேற்கு நாடாளுமன்ற தொகுதியில் அடங்கியுள்ள மணிநகர் சட்டசபை தொகுதி தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி. இது நரேந்திர மோடியின் தொகுதி ஆகும். அதாவது, குஜராத்தில் 2002, 2007 மற்றும் 2012 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் இந்த தொகுதியில் இருந்து மோடி தொடர்ந்து மூன்று முறை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014-ம் ஆண்டு இந்த தொகுதியின் உறுப்பினராக இருந்த போதுதான், அவர் ராஜினாமா செய்துவிட்டு தேசிய அரசியலுக்கு சென்று பிரதமர் ஆனார்.

1990 முதல் மணிநகர் தொகுதி பாரதீய ஜனதா வசம் இருந்து வருகிறது. 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் இந்த தொகுதியில் பாரதீய ஜனதா வேட்பாளர் சுரேஷ் பட்டேல் 71.24 சதவீத வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அந்த கட்சியின் சார்பில் அமுல்பாய் பட் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். காங்கிரஸ் சார்பில் சி.எம்.ராஜ்புத்தும், ஆம் ஆத்மி சார்பில் விபுல் பட்டேலும் போட்டியிடுகிறார்கள்.

இந்த முறையும் தமிழர்களின் ஆதரவுடன் மணிநகரில் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்று பாரதீய ஜனதா கருதுகிறது.

தேர்தல் செலவு ரூ.450 கோடி

இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துவது என்பதே பெரும் சவாலான பணி. இதற்கே பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவாவதால் அரசுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படுகிறது. மேலும் இந்த செலவு ஒவ்வொரு தேர்தலுக்கும் கூடிக்கொண்டே போகிறது.

குஜராத்தில் சட்டசபை தேர்தலை நடத்தி முடிக்க, 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.387 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால் ரூ.450 கோடி வரை செலவாகும் என்று தற்போது தேர்தல் கமிஷன் அதிகாரிகள் மதிப்பிட்டு உள்ளனர்.

அங்கு 2012-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை நடத்த ரூ.175 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதைவிட கூடுதலாக செலவானது. 2017-ம் ஆண்டு தேர்தலை நடத்த ரூ.250 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்ட நிலையில் ரூ.326 கோடி செலவானது.


Next Story