ஆவடி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
ஆவடி அருகே கொலை வழக்கில் கைதான கூலித்தொழிலாளி மனைவியை குடும்பம் நடத்த அழைத்தபோது வராததால் மனவிரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆவடி அடுத்த கரலப்பாக்கம் அண்ணாமலை கார்டன் பகுதியில் வசித்து வந்தவர் செல்வம் (வயது 47). கூலித்தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (41) இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த 2010-ம் ஆண்டு திருவேற்காடு பகுதியில் செல்வம் தனது உறவினர் மகனை கல்லால் தலையில் அடித்து கொலை செய்த வழக்கில் திருவேற்காடு போலீசார் செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதைத்தொடர்ந்து கடந்த 11 ஆண்டுகளாக சிறையில் இருந்த செல்வம் இலவச சட்ட உதவி மையம் மூலம் கோர்ட்டில் ஜாமீன் பெற்று கடந்த மாதம் 3-ந்தேதி சிறையில் இருந்து வெளியே வந்தார். இவரது மனைவி தனது பிள்ளைகளுடன் மாங்காடு பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் செல்வம் சிறையில் இருந்து வெளியே வந்ததும் மாங்காடு சென்று தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அப்பொழுது மனைவி மற்றும் பிள்ளைகள் செல்வத்துடன் வருவதற்கு மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செல்வம் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்ற முத்தாபுதுப்பேட்டை போலீசார் செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.