காஞ்சீபுரத்தில் தொழிலாளி தற்கொலை
காஞ்சீபுரத்தில் தொழிலாளி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார்.
சின்ன காஞ்சீபுரம் டோல்கேட் அருகே உள்ள அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி ஞானசேகர் (வயது 58). இவர் வாடகை வீட்டில் தனது மனைவி ஹேமலதா என்பவருடன் வசித்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்களும் திருமணமாகி சென்ற நிலையில் கணவன்-மனைவி மட்டும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்குமிடையே அவ்வப்போது சண்டை ஏற்படும் என கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே கோபமடைந்த ஞானசேகரின் மனைவி தனது மகளின் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
வீட்டில் தனியாக இருந்த வந்த ஞானசேகரன் மனஉளச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.
வீட்டின் உரிமையாளர் கீழே இறங்கி வெளியே செல்லும்போது ஞானசேகரனின் வீட்டில் இருந்து புகை வந்துள்ளது. இதனையடுத்து சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக விஷ்ணு காஞ்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஞானசேகரன் எரிந்த நிலையில் உயிரிழந்து கிடந்தார். இதனையடுத்து ஞானசேகரனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.