விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் விபத்தில் பலி: போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்


விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் விபத்தில் பலி: போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்
x

காஞ்சீபுரத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் போலீசாரிடம் இருந்து தப்பியோடிய போது தனியார் பஸ் மோதி் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்ட போலீஸ் ஏட்டுவை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவிட்டார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் அடுத்த குண்டுகுளம் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் சீனிவாசன் (வயது 27). காஞ்சீபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த பணியில் பிளம்பராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் கீழ்கதிர்பூர் அருகே ரோந்து சென்ற மதுவிலக்கு போலீசார் சீனிவாசனை வழிமறித்து சோதனையிட்டபோது, 10-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் இருந்ததையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சினீவாசனின் தந்தை லோகநாதன் சட்டவிரோதமாக மதுபாட்டிகள் விற்பனை செய்பவர் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து போலீஸ் ஏட்டு மகேஷ். சீனிவாசனை தனது மோட்டார் சைக்கிளில் அமரவைத்து, திருவீதிபள்ளம் பகுதியில் உள்ள மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து சென்றார்.

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது சீனிவாசன் மோட்டார் சைக்கிளில் இருந்து தப்ப முயன்றார். அப்போது எதிரே வந்த தனியார் தொழிற்சாலை பஸ் எதிர்பாரதவிதமாக மோதியதில் சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போலீசார் சீனிவாசனை விசாரணைக்கு அழைத்து செல்வது குறித்து தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சீனிவாசனின் குடும்பத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் மன்ற நிர்வாகிகள் என சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரி முன்பு கூடி, சீனிவாசனின் உயிரிழப்பிற்கு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சீனிவாசனின் உடல் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணைக்காக மோட்டார் சைக்கிளில் சீனிவாசனை அழைத்து சென்ற போலீஸ் ஏட்டு மகேஷ் கவனக்குறையாக செயல்பட்டதால், அவரை பணியிடை நீக்கம் செய்து காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும் எந்த வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தவிர்க்கும் பொருட்டு காஞ்சீபுரம் மட்டுமின்றி கடலூர் போன்ற மாவட்டங்களிலிருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு குண்டுகுளம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Next Story