சட்டப்பேரவை தேர்தல்: திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு நேர்காணல் தொடங்கியது
சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடனான நேர்காணல் தற்போது தொடங்கியுள்ளது.
சென்னை,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12ம் தேதி தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை உறுதி செய்து ஒதுக்கி கொடுப்பதில் திமுக. ஆர்வம் காட்டி வருகிறது. இதனிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 2021-சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு வழங்கிய திமுகவினரிடம் இன்று (02-03-2021) முதல் 06-03-2021 வரை நேர்காணல் நடத்த உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “தமிழ்நாடு புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் கழக தலைவர் மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை, மாவட்ட வாரியாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நேர்காணல் வாயிலாக சந்தித்து தொகுதி நிலவரம்-வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து அறிந்திட உள்ளார்கள். குறிப்பிட்ட தேதிகளில் குறிப்பிட்டுள்ள மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட கழக செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள் மட்டும் வர வேண்டும். நேர்காணலுக்கு வருபவர்கள் ஆதரவாளர்கள் மற்றும் பரிந்துரையாளர்களை அழைத்து வர அனுமதி இல்லை” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி தி.மு.க. சார்பில், வேட்பாளர்களாக போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த மாதம் 17-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இதில், கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட மு.க.ஸ்டாலின், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் விருப்பமனு அளித்தனர். மொத்தம் 8 ஆயிரத்து 388 விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டது. இதில் 7 ஆயிரத்து 967 மனுக்கள் தாக்கல் ஆகி உள்ளதாக அண்ணா அறிவாலய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது.
இந்த நிலையில், விருப்பமனு அளித்தவர்களிடம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர் நேர்காணல் இன்று தொடங்கியது. இந்த நேர்காணலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் நடத்தி வருகின்றனர்.
இன்று காலை கன்னியாகுமரி (கிழக்கு, மேற்கு) தூத்துக்குடி (வடக்கு, மேற்கு), திருநெல்வேலி (கிழக்கு, மத்திய), தென்காசி (வடக்கு, தெற்கு), ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறுகிறது.
தொடர்ந்து இன்று மாலை, விருதுநகர் (வடக்கு, தெற்கு), சிவகங்கை, தேனி (வடக்கு, தெற்கு), திண்டுக்கல் (கிழக்கு, மேற்கு) ஆகிய தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story