திருச்சியில் திமுக சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம்: குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் - மு.க.ஸ்டாலின்


திருச்சியில் திமுக சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம்: குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 7 March 2021 2:27 PM GMT (Updated: 7 March 2021 2:40 PM GMT)

“தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம்” என்ற பெயரில் திமுக சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

திருச்சி, 

திருச்சி அருகே சிறுகனூரில் திமுக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தமிழகத்துக்கான தொலைநோக்குத் திட்டங்களை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து வருகிறார். 

திருச்சியை அடுத்த சிறுகனூரில் திமுக சார்பில் தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்’ என்ற தலைப்பிலான பொதுக்கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சிக் கொடி ஏற்றி வைத்து பொதுக்கூட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதன்பின் பிரச்சார காணொலிகள், மறைந்தமுன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த காணொலிகள் ஒளிபரப்பப்பட்டன. 

இந்நிலையில் தமிழகத்தின் விடியலுக்கான உறுதிமொழிகள் குறித்தும், தொலைநோக்கு திட்டங்களை வெளியிட்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.

அப்போது பேசிய அவர், “ தமிழகத்தின் எதிர்காலமாக திமுகவின் திருச்சி மாநாடு அமைந்துள்ளது. தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் எனும் பொதுக் கூட்டத்திற்கு வந்ததில் மகிழ்ச்சி. திமுக தலைவராக 2018ஆம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி பொறுப்பேற்றேன். இன்று முதல் ஸ்டாலின் புதிதாக பிறக்கிறேன் என அன்று சொன்னேன். நல்ல ஒரு எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கத்தோடு எனது கனவு திட்டத்தை இன்று அறிவிக்கிறேன். எந்த திருச்சியில் நாம் கூடியிருக்கிறோம்? கட்சி தொடங்கியவுடன் வீதியில் பேசிக் கொண்டிருக்கும் திமுகவினர் சட்டசபையில் பேச தைரியம் உண்டா என கேட்டனர்.

அப்போது நாம் தேர்தலில் நிற்கலாமா வேண்டாமா என முடிவெடுத்த இடம்தான் இந்த திருச்சி. அன்று உங்கள் அனுமதியுடன் தேர்தலில் போட்டியிட்டு சட்டசபைக்குள் போனோம். ஒரு முறை இரண்டு முறை அல்ல தமிழகத்தில் 5 முறை திமுக ஆட்சி நடைபெற்றது.

இந்த பொதுக் கூட்டத்தை மாநாடு என்று அறிவிக்கவில்லை. மாபெரும் கூட்டம்னுதான் சொன்னேன். திருச்சியில் என்னுடைய தொலைநோக்கு திட்டத்தை வெளியிடுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

திமுக ஆட்சியில் தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்றிருந்தது. ஆனால் இவை அனைத்தையும் அதிமுக ஆட்சி நாசமாக்கிவிட்டது. இந்த ஆட்சிக்கு ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி முற்றுப்புள்ளி வைப்போம். மே 2ஆம் ஆண்டு தமிழகத்தின் புதிய விடியலாக திமுக ஆட்சி அமையவிருக்கிறது. எனது 10 ஆண்டு திட்டத்தை அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன்.

ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள் என்று பெயர் சூட்டியுள்ளேன். பொருளாதாரம், வேளாண்மை, நீர் வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நக்ரப்புற வளர்ச்சி, ஊரக உட்கமைப்பு, சமூக நீதி ஆகிய அழைத்தும் முக்கியமானவை. இந்த 7 துறைகளையும் சீரமைப்பதே எனது முதல் பணி.

இதை எப்படி நிறைவேற்றுவது என்பதை சொல்கிறேன். வளரும் வாய்ப்புகள், வளமான தமிழகம்- தமிழக பொருளாதாரத்தை இரட்டை இலக்க பொருளாதாரமாக உயர்த்துவோம். இதில் சாதித்துவிட்டால் பொருளாதாரம் ரூ 35 லட்சம் கோடியை தாண்டும். தனிவபர் வருமானம் ரூ 4 லட்சம் மேல் உயரும். ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். வேலையில்லா திண்டாட்ட விகிதத்தை பாதியாக குறைப்போம். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஒரு கோடி மக்களை அடுத்த 10 ஆண்டுகளில் அவர்கள் மேம்பட பாடுபடுவோம்

பள்ளி இடைநிற்றல் சதவீதம் குறைக்கப்படும். பட்டதாரிகளின் எண்ணிக்கை இருமடங்காக உயர்த்தப்படும். நகர்புறத்தில் புதிதாக 35 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு. அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி செய்து கொடுக்கப்படும். குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும்” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான திமுகவினர் பங்கேற்றுள்ளனர். அதற்கேற்ப 700 ஏக்கர் பரப்பளவில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பல கி.மீ தொலைவுக்கு வழிநெடுகிலும் கட்சிக் கொடிகள், கட் அவுட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பொதுக்கூட்டத்தில் திமுகமாநில நிர்வாகிகள் ஆ.ராசா, கனிமொழி, தயாநிதிமாறன், எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், கு.பிச்சாண்டி, ஏ.கே.எஸ் விஜயன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்றுள்ளனர்.

Next Story