இலங்கை கடல் பகுதியில் மீன்பிடி படகில் 121 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் - 6 பேர் கைது


இலங்கை கடல் பகுதியில் மீன்பிடி படகில் 121 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் - 6 பேர் கைது
x

இலங்கை கடல் பகுதியில் 121 கிலோ எடையுள்ள போதைப்பொருட்களுடன் மீன்பிடி படகு பிடிபட்டது.

கொழும்பு,

இலங்கையின் தென்பகுதியில் டோன்ட்ராவை சுற்றியுள்ள பகுதிகளில் இலங்கை கடற்படை கப்பல் ரோந்து சுற்றி வந்தது. அப்போது, டோன்ட்ராவில் இருந்து 413 கடல் மைல் தொலைவில் ஒரு மீன்பிடி படகு சந்தேகத்துக்கிடமான வகையில் சென்று கொண்டிருந்தது. அந்த உள்நாட்டு படகை இலங்கை கடற்படை அதிகாரிகள் இடைமறித்து நிறுத்தினர்.

படகில் இறங்கி சோதனை நடத்தினர். அதில், 111 கிலோ ஹெராயின் போதைப்பொருட்களும், 10 கிலோ கஞ்சாவும் இருந்தன. அவற்றை கடற்படை அதிகாரிகள் கைப்பற்றினர். படகில் 6 பேர் இருந்தனர். அவர்களை கைது செய்தனர். படகையும், போதைப்பொருட்களையும், கைதான 6 பேரையும் கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு, இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.280 கோடி ஆகும். இத்துடன், இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 760 கோடி இலங்கை ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை இலங்கை கடற்படை கைப்பற்றி உள்ளது.


Next Story