ஈரானில் பயங்கரவாதிகள்-பாதுகாப்பு படையினர் இடையே பயங்கர மோதல்: 28 பேர் பலி


ஈரானில் பயங்கரவாதிகள்-பாதுகாப்பு படையினர் இடையே பயங்கர மோதல்: 28 பேர் பலி
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 5 April 2024 7:50 AM GMT (Updated: 5 April 2024 11:19 AM GMT)

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 10 பேர் பலியாகினர்.

தெஹ்ரான்,

ஈரானின் 2-வது மிகப்பெரிய மாகாணமான சிஸ்டன்-பலுசிஸ்தானில் உள்ள ராஸ்க், சர்பாஸ் மற்றும் சாஹ்பஹார் ஆகிய நகரங்களில் ராணுவ சோதனை சாவடிகள் மற்றும் கடலோர காவல் நிலையம் மீது நேற்று முன்தினம் இரவு பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். ஒரே சமயத்தில் பல இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதல்களால் பாதுகாப்பு படையினர் நிலைகுலைந்து போயினர். அவர்கள் சுதாரித்துக்கொண்டு பதில் தாக்குதல் நடத்துவதற்குள் பயங்கரவாதிகள் பொதுமக்கள் பலரை பணய கைதிகளாக பிடித்து வைத்தனர்.

இதை தொடர்ந்து கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பணய கைதிகளை மீட்பதற்கான முயற்சி முடுக்கிவிடப்பட்டது. அப்போது பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இந்த சண்டை விடியவிடிய தொடர்ந்தது. இதில் 18 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு, பணய கைதிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். எனினும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 10 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையிலான பயங்கர மோதலில் 28 பேர் பலியான சம்பவம் ஈரானில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story