போரில் அணு உலை பாதுகாப்பு; ரஷியாவுக்கு அழுத்தம்கொடுக்க கோரிக்கை... அதை செய்தோம் - ஜெய்சங்கர்


போரில் அணு உலை பாதுகாப்பு; ரஷியாவுக்கு அழுத்தம்கொடுக்க கோரிக்கை... அதை செய்தோம் - ஜெய்சங்கர்
x

போரில் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு உலையான உக்ரைனின் ஜாபோர்ஜியா நகரில் உள்ள அணு உலை மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆக்லாந்து,

உக்ரைன் ரஷியா இடையேயான போரில் உக்ரைனின் ஜாபோர்ஜியா நகரில் உள்ள அணு உலை ரஷிய படையினரால் கைப்பற்றப்பட்டது. போர் உச்சத்தில் இருந்தபோது ரஷிய படைகள் ஜாபோர்ஜியா அணு உலை மீது தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டது.

அவ்வாறு தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில் அது மிகப்பெரிய பேரழிவாக கருத்தப்படும். ஜாபோர்ஜியா அணு உலை ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய அணு உலையாகும். அந்த அணு உலை மீதான தாக்குதல் உக்ரைன் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஐரோப்பியாவையும் அழிவுபாதைக்கு கொண்டு சென்றிருக்கும். ஆனால், அணு உலை மீது மிகப்பெரிய அளவிலான தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை. அதேவேளை, அணு உலை ரஷிய படையால் கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில், முதல் முறையாக நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி அந்நாட்டு பிரதமர் ஜெசிண்டா அர்டெர்னை சந்தித்து பேசினார்.

அதன் பின்னர் தலைநகர் ஆக்லாந்தில் நடந்த நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் பங்கேற்றார். உக்ரைன் போர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஜெய்சங்கர் பேசினார். குறிப்பாக, போரில் ஜாபோர்ஜியா அணு உலை அருகே சண்டை நடைபெற்ற தருணம், அணு உலை பாதுகாப்பு குறித்தும் அவர் பேசினார்.

ஜெய்சங்கர் கூறுகையில், உக்ரைன் போரில் இந்த சூழ்நிலையில் இந்தியா அதன் நலனுக்காக மட்டும் செயல்படாமல் உலகின் நலனுக்காவும் செயல்பட அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளும். நான் ஐ.நா. சபையில் இருந்தபோது, அந்த நேரத்தில் ஜாபோர்ஜியா அணு உலையின் பாதுகாப்பு தான் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. ஏனென்றால் அணு உலை அமைந்துள்ள பகுதியில் சண்டை நடைபெற்று வந்தது.

அணு உலை பாதுகாப்பு குறித்து ரஷியாவுக்கு அழுத்தம்கொடுக்கும்படி எங்களுக்கு கோரிக்கை வந்தது. அந்த கோரிக்கையை ஏற்று நாங்கள் அதை செய்தோம். வெவ்வேறு கால கட்டத்தில் வெவ்வேறு பிரச்சினைகள் எழுந்தன. வெவ்வேறு நாடுகள் அந்த பிரச்சினைகளை எங்களிடமும், ஐ.நா. சபையிலும் எழுப்பின. இந்த சூழ்நிலையில் எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்ய நாங்கள் தயாராக உள்ளோம்' என்றார்.


Next Story